கலைஞரைப் பற்றி இப்போது பேசினாலும் கண் கலங்கிவிடுவார் அமைச்சர் எ.வ.வேலு. தனிப்பட்ட உரையாடல் என்றாலும், பொது மேடைகளானாலும் கலைஞர் பற்றி பேசினாலே அவரது கண்களில் நீர் துளிகள் ததும்பும்.
இந்த உணர்ச்சிகளை மட்டுமல்ல…கலைஞரோடு சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய நினைவுகள், அவரது கட்சி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் தனது அனுபவங்களைத் தொகுத்து, ‘கலைஞர் எனும் தாய்’ என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
இந்த நூல் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
அமைச்சர் உதயநிதி வரவேற்புரை நிகழ்த்த… திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையேற்று இந்நூலை வெளியிடுகிறார். நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
இந்த நூல் குறித்து ஆய்வுரையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் ஆகியோர் நிகழ்த்துகிறார்கள்.
அமைச்சர் எ.வ.வேலு ஏற்புரையாற்ற, சீதை பதிப்பகம் கௌரா ராஜசேகர் நன்றியுரையாற்றுகிறார்.
இந்த நூல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், “குறளோவியம் தீட்டிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு எழுத்தோவியம் தீட்டியிருக்கிறார் அருமைச் சகோதரர் எ.வ.வேலு அவர்கள். தலைவர் கலைஞரால், ‘ எதிலும் வல்லவர்’ என்று போற்றப்பட்டவர் எ.வ.வேலு. எழுத்திலும் வல்லர் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்” என குறிப்பிட்டிருக்கிறார்.
கலைஞரின் மாணவராக, கலைஞரின் தொண்டராக, கலைஞரின் கட்சி நிர்வாகியாக, கலைஞரின் ஆட்சியில் அமைச்சராக இப்படி பல்வேறு தருணங்களில் எ.வ.வேலுவின் பார்வையில் உருவாகியிருக்கும், ‘கலைஞர் எனும் தாய்’ நூல் திமுகவைத் தாண்டியும் மாற்று அரசியல் கூடாரங்களிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
“மகளே என்று பேசினார், பின்னர் கூப்பிட்டார்!” மலையாள சூப்பர்ஸ்டார் மீது திலகன் மகள் குற்றச்சாட்டு!
அச்சுறுத்தும் ‘குரங்கு அம்மை’: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
மீண்டும் விர்ரென எகிறிய தங்கம் விலை!