மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்டு 18) சென்னை கலைவாணர் அரங்கில் கோலாகலமாக நடந்திருக்கிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் வெளியிட்டுள்ள இந்த நாணயத்தை வாங்க திமுகவினரும், கலைஞரின் அபிமானிகளும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
திமுகவின் பல்வேறு நிர்வாகிகளும் இன்றே கலைஞரின் நாணயத்தை வாங்கிவிட வேண்டும் என்று பலரையும் தொடர்புகொண்டு வருகின்றனர்.
நம்மிடம் பேசிய திமுக புள்ளிகள், “இந்த நாணயம் பொது மக்கள் மத்தியில எப்ப புழக்கத்துக்கு வரும்? இதை எப்படி வாங்குறது? எங்க வாங்குறது?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுகுறித்து மத்திய அரசின் நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்
“இந்தியாவில் பிறந்த இந்தியாவுக்கு அரசியல், ரீதியாகவும் பொது வாழ்க்கை, இலக்கியம், அறிவியல், கல்வி உள்ளிட்ட வகைகளில் மக்கள் தொண்டாற்றியவர்களுக்கு நினைவு நாணயம் வெளியிடுவது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நிதியமைச்சகத்தில் பொருளாதார விவகாரப் பிரிவுக்கு உட்பட்ட கரன்சி மற்றும் காயின் டிவிஷனுக்குள் இது வருகிறது.
அதாவது இந்திய சமுதாயத்துக்கு சிறப்பாக தொண்டாற்றிய ஆளுமைகள், நிறுவனங்கள், அமைப்புகள் பெயரில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு வருகிறது. பிரதமரின் ஆலோசனைக்குப் பின் நிதியமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகு இந்த நினைவு நாணயம் வெளியிடப்படும்.
இப்படித்தான் கலைஞருக்கும் அவரது நூற்றாண்டை ஒட்டி இந்த நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளுக்காக 150 ரூபாய் மதிப்புள்ள நாணயம் வெளியிடப்பட்டது.
ஷ்யாம் சரண் லாஹிரி 125 ஆவது பிறந்த நாளை ஒட்டி 125 ருபாய் மதிப்புள்ள நாணயம் வெளியிடப்பட்டது.
2019 இல் ராஜ்யசபாவின் 250 ஆவது செஷனை ஒட்டி 250 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
இதேபோல் பாஜக தலைவர் வாஜ்பாய், விஜயராஜே சிந்தியா ஆகியோருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
சமீபத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆருக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயங்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணுக்கேற்ற மதிப்புடையவை அல்ல. அதாவது 100 ரூபாய், 125 ரூபாய், 150 ரூபாய் என்று அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் மதிப்பு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இந்த நாணயங்கள் மற்ற கரன்சி ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் போல பொதுப் புழக்கத்துக்கானவை கிடையாது. அதனால்தான் இவை நினைவு நாணயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற கலைஞரின் எழுத்துகள் அவரது கையெழுத்திலேயே பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கான உற்பத்தி செலவு ஒரு நாணயத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். எனவே இந்த நினைவு நாணயங்கள் ஒவ்வொன்றுக்கும் நிதியமைச்சகமே ஒரு விலையை நிர்ணயித்துள்ளது.’
உதாரணத்துக்கு வாஜ்பாய் நினைவு நாணயம் ஒன்று 6 ஆயிரத்து 44 ரூபாய். இப்போது 18 தான் ஸ்டாக் உள்ளது.
அதேபோல எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு நாணயம் இப்போது 8 ஆயிரம் ரூபாய்.
இந்த வகையில் கலைஞர் நினைவு நாணயத்தின் உற்பத்திச் செலவு உள்ளிட்ட காரணிகளை வைத்து 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 000 ரூபாய் வரை விற்கப்படலாம்.
இதுபோன்ற நினைவு நாணயங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவில்தான் உற்பத்தி செய்யப்படும்.
இவற்றின் தேவைக்கேற்ப ரிசர்வ் வங்கியில் தெரிவித்தால் அவர்கள் நாணயம் அச்சடிக்கும் தங்களது நிறுவனங்களிடம் சொல்லி குறிப்பிட்ட நாணயங்களை அச்சடிப்பார்கள்.
இந்த வகையில் ரிசர்வ் வங்கி, உங்கள் அருகே உள்ள வங்கிகள், சென்னை அண்ணா சாலையில் இருக்கும் தலைமை அஞ்சல் அலுவலகம் ஆகியவற்றில் கலைஞர் நினைவு நாணயத்தை கேட்டுக் கோரிக்கை வைக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவர்கள் செய்து கொடுப்பார்கள்.
அல்லது இந்திய அரசின் நினைவு நாணயங்கள் தொடர்பான https://www.indiagovtmint.in/en/product/150th-birth-anniversary-of-mahatma-gandhi-unc/ இணைய தளத்தில் கலைஞர் நாணயம் சேர்க்கப்பட்டவுடன் அந்த இணைய தளத்திலேயே இது தொடர்பான விவரம் வெளியிடப்படும். அதிலேயே ஆர்ட்டர் செய்யலாம்” என்கிறார்கள் நிதித்துறை அமைச்சக அதிகாரிகள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் அப்டேட்!