“மந்திரிக்காக தலைமைச் செயலாளரையே மாற்றியவர் கலைஞர்” -ஸ்டாலினுக்கு துரைமுருகன் மெசேஜ்!

அரசியல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை தென் மேற்கு மாவட்ட திமுக சார்பில், ’கலைஞரோடு நான்’ என்ற தலைப்பிலான தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஜூலை 11 ஆம் தேதி இரவு சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு கலைஞரோடு தான் பயணித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை தென் மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை வேலு நிகழ்ச்சி ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

‘நேற்று (ஜூலை 11) மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணையில், ‘வருத்தம்… வைராக்யம்… ஸ்டாலின் -துரைமுருகன் முற்றுகிறது மோதல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “சீனியரான துரைமுருகன் தனது துறையில் தன்னைக் கேட்காமலேயே செயலாளர் மாற்றப்படுவது பற்றியும், புதிய செயலாளர் கூட இரு நாட்கள் கழித்துதான்  தன்னை சந்திப்பது பற்றியும் அவர் வருத்தப்பட்டதை’ வெளியிட்டிருந்தோம்.

நேற்று ‘கலைஞரோடு நான்’ நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியபோது கலைஞர் தனக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அமைச்சருக்காக தலைமைச் செயலாளரையே எதிர்த்து நின்ற சம்பவத்தையும் நினைவுபடுத்திப் பேசினார்.

duraimurugan message to stalin
“அடிமுடி காணமுடியாத அருணாசலேஸ்வரர். இமயத்தின் இடுப்பில் 53 ஆண்டுகள் உட்கார்ந்திருந்தவன் ஆனாலும் இதுதான் கலைஞர் என்று என்னால் வரையறுக்கவே முடியாது. அப்படிப்பட்டவர் அவர்,

எனக்கு அணு அணுவாக அவரைப் பற்றி தெரியும். எங்கே கலைஞர் வீக், எங்கே கலைஞர் ஸ்ட்ராங்… எங்கே ஏமாந்து போவார் என்று தெரியும், சீட்டாட்டத்தில் கூட அவரை ஏமாற்ற முடியாது. எதிலும் அவரை கட்டுப்படுத்த முடியாது.

ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணம் கலைஞர் தான். தலைவனிடத்தில் தொண்டன் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அண்ணா அவருக்குத் தலைவர்.

duraimurugan message to stalin

ஆனால் ஒரு நாளைக்கு அவரோடு இருந்து பார்த்தால் குறைந்தது 500 முறையாவது அண்ணா பேரைச் சொல்லுவார். கோட்டைக்கு போகும்போது உழைப்பாளர் சிலை வரும்போது கழுத்து அண்ணாவின் பக்கம் திரும்பிவிடும். திரும்பி வரும்போது நேப்பியர் பாலம் வரும்போது கழுத்து அண்ணா நினைவிடம் நோக்கி திரும்பிவிடும்.

அண்ணாவை போல் ஒரு தலைவன் உலகத்தில் கிடையாது. அவர் இல்லையென்றால் தமிழ் இல்லை, தமிழ்நாடு இல்லை என்பார். நான் ஒரு நாளைக்கு 200 300 முறையாவது கலைஞர் பெயரைச் சொல்லாமல் இருந்ததில்லை.

அவரோடு பயணம் செய்தால் ஒரு வரலாறு. அவர் நம்மை போட்டுத் தாக்குவதைப் போல், நாம் திருப்பி சொன்னால் சகித்துக் கொள்வார். ஆனால் எப்போதும் கட்சிக்காரரை விட்டுக்கொடுக்க மாட்டார்.

உணவுத் துறை அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், நான், கலைஞர் மூவரும் கோட்டைக்கு சென்றோம். அப்போது உணவுத் துறையில் ஏதோ ஒரு பிரச்சினை. கலைஞர் பென்சிலை கையில் உருட்டி கொண்டே தலைமைச் செயலாளர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பொன்.முத்துராமலிங்கம் குறுக்கிட்டு பேச அந்த தலைமைச் செயலாளர், ‘இதெல்லாம் உங்களுக்கு விளங்காது சார். இது எக்கனாமிக்ஸ்’ என்று திமிராக பேசினார்.

duraimurugan message to stalin

உடனே முத்துராமலிங்கத்துக்கு கோபம் வந்துடுச்சு. ‘உன்னை விட நான் அதிகம் படிச்சவன். என்ன எக்கனாமிக்ஸ் சொல்லு..’ என்று ஏறிட்டாரு. அப்ப தலைமைச் செயலாளரும் ஏதோ பேசினாரு.

உடனே குறுக்கிட்ட முதல்வர் கலைஞர், ‘மிஸ்டர் சீஃப் செகரட்டரி… மிஸ்டர் பொன்முத்துராமலிங்கம் நாட் ஒன்லி மை மினிஸ்டர், ஹி ஈஸ் கமாண்டர் ஆஃப் மை பார்ட்டி. மைண்ட் இட்’ என்று கோபமாக சொல்லிவிட்டு பென்சிலை வீசியடித்தார்.

அடுத்த பத்து நிமிடத்தில் தலைமைச் செயலாளரை மாற்றிவிட்டார். ‘என் எதிர்லயே என் மாவட்டச் செயலாளரை, மந்திரிய தாக்கி பேசுறதுக்கு என்ன கொழுப்பு இருக்கணும்?’ என்று ஆத்திரப்பட்டார் கலைஞர். அதுதான் தலைவர், அதுதான் தலைவர்” என்று பேசிய துரைமுருகன்,

அடுத்து இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார்.

”எந்த விஷயமாக இருந்தாலும் எல்லாரையும் கேட்டு செய்வார். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் முன்னர் டிரைவர் முதற்கொண்டு கருத்து கேட்பார். ஏன்யா அவன்கிட்டல்லாம் கேட்டுக்கிட்டு என நாங்க சொல்லும்போது, ‘நீங்கள்லாம் எனக்கு தகுந்த மாதிரி சொல்லிட்டுப் போயிடுவீங்க. அவன் தான்ய்யா டிசைட் பண்றவன். மக்கள் என்ன நினைக்கிறாங்கனு அவனுக்குதான்ய்யா தெரியும்.

இரவு 12 மணிக்கு போன் பண்ணி துரை வா ஒரு முக்கிய விஷயம் பேசணும்பாரு. தலைவர் எந்த விஷயமா இருந்தாலும் என்கிட்ட கேட்டுதான் முடிவெடுக்குறாருனு பெருமிதமா இருக்கும்.

நான் பெருமைக்காக சொல்லவில்லை, அவரோடு கடைசி வரை இருந்த நித்யாவுக்கு கூட தெரியும். அவரது பேச்சு நின்றபோனபோதும் கூட, பேச முடியாமல் போனபோதும் கூட ‘துரை துரை…’ என்று அவர் சொல்ல முயற்சித்துக் கொண்டே இருப்பார். நித்யா என்கிட்ட, ‘அண்ணா… இங்கயே இருந்துட்டு அப்பறமா போங்கண்ணா’ என்று சொல்லுவார். தலைவரோடு நட்புக்கு நட்பாகவும், தலைமைக்கு தொண்டனாகவும் இருந்தவன் நான்” என்று கண் கலங்கினார் துரைமுருகன்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், “ நான் 1954 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காட்பாடியில் அன்னை சத்தியவாணி முத்து அம்மையாரை அழைத்துச் சென்று கிளைக் கழகம் துவக்கி 1954 இல் கார்டு வைத்துக் கொண்டிருக்கிற கட்சித் தொண்டன் நான்.
ஆகவே என் தொண்டுக்கு தன் தந்தையை ஒத்து இந்த இயக்கத்தை நடத்துகிற தளபதி அவர்கள் இரண்டு கோடி பேர் கொண்ட இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை வழங்கியிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா பொதுச் செயலாளராக இருந்தார், நாவலர் பொதுச் செயலாளராக இருந்தார், பேராசிரியர் பொதுச் செயலாளராக இருந்தார். திமுகவின் நான்காவது பொதுச் செயலாளர் துரைமுருகன் என்ற பெருமையை எனக்கு தந்திருக்கிறார். நான் என் மகன் என தலைமுறையே திமுகவுக்காகவே பாடுபடுவோம்” என்று உரையை முடித்தார்.

துரைமுருகனின் பேச்சைக் கேட்டவர்கள், “கடந்த காலத்தை நினைத்து அதை வெளியே சொல்லி தன் ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கிறார் பொதுச் செயலாளர்” என்று பேசிக் கொண்டார்கள்.

-ஆரா

டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் இதுதான்!

விஜய் சேதுபதி 50- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

+1
0
+1
2
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *