பத்திரிகையாளர் ப்ரியன்
சென்ற வாரம் சென்னையில் மியூசிக் அகாடமியின் இசை விழாவைத் துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது பலரது பார்வையில் படாமல் போயிருக்கலாம். அவரே சொன்னது போல எந்த வித டென்ஷனும இல்லாமல் அவர் கலந்து கொண்ட விழா.
தமிழிசைக்கு முக்கியத்துவம்: ஸ்டாலின் பேச்சு!
“சபாக்களில் தமிழிசைக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும்” என்பதே அவரது ஒட்டு மொத்த பேச்சின் அடிநாதம். அது மட்டுமல்லாமல் தனது தாத்தா முத்துவேலர் மற்றும் தந்தை கலைஞர் ஆகியோருக்கு இசையோடு இருந்த தொடர்பை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
“என் தாத்தா முத்துவேலர் இசைவாணர். பாடல்கள் எழுதி பாடுவதிலும் வல்லவர்.
சில காலம் இசை கற்றுக் கொண்டாலும் இசை ஞானம் அதிகம் கொண்டவராக இருந்தார் கலைஞர்.
தமிழுக்கும் இசைக்கும் இருக்கும் தொடர்பை முழுவதும் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், சிலப்பதிகாரம் மற்றும் பக்தி இலக்கியங்களான தேவாரம் திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை படிக்க வேண்டும்” என்றார் ஸ்டாலின்.

“தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ” என்று முதல்வர் பேசியது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.. அதே சமயம் அவர் தனது பேச்சில் “கச்சேரிகளில் தமிழ் பாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ” என்று 1940-50களில் பெரிய இயக்கமே நடத்திய ராஜா அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, அமரர் கல்கி ஆகியோரைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றம் கட்டப்பட்டது.
தமிழிசை மூவர்
இதைவிட முக்கியமாக தமிழிசை மூவர் என்றும் சீர்காழி மூவர் என்றும் போற்றப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகியோரைப் பற்றியும் முதல்வர் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தமிழ் சாகித்தியங்களில் பக்தி ரசமும் சங்கீத பாவமும் அதிகம் உண்டு என்று உணர்த்தியவர்கள் இந்த இசைவாணர்கள். இதைச் சொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் என்றால் தமிழிசை மூவருக்கு சீர்காழியில் மணிமண்டபம் எழுப்பியவர் கலைஞர்.
2010-11ம் ஆண்டுகளில் கலைஞரின் சீரிய முயற்சியாலும், அவரது வழி காட்டலில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் தொடர் கண்காணிப்பிலும் சீர்காழியில் எழுந்த அந்த மணிமண்டபத்தை, 2011 தேர்தல் வந்து விட்டதால், கலைஞரால் திறந்து வைக்க முடியவில்லை.
2013ல் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கலைஞர் முதல்வராக தொடர்ந்திருந்தால் பிரம்மாண்ட விழா எடுத்திருப்பார்.

மூவர் சிலைகள்: கலைஞரின் திருத்தங்கள்!
அந்த மணிமண்டபக் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அடிக்கடி நேரில் சென்று பார்வையிடுவார் பரிதி. புகைப்படங்கள் எடுத்து முன்னேற்றங்களை கலைஞரிடம் காட்டுவார். கலைஞர் பல திருத்தங்களையும் யோசனைகளையும் கூறுவார். மணிமண்டப முகப்பில் தமிழிசை மூவரின் ஆளுயர சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டது. அதன் முதல் கட்டமாக, ஒவியர் வரைந்து கொடுத்த அந்த இசைவாணர்களின் படங்களை ஒப்புதலுக்காக கலைஞரிடம் காட்டினார் பரிதி.
அருணாசல கவிராயர் படத்தைப் பார்த்து , “என்ன ….திருவிளையாடல் தருமி மாதிரி வரைந்திருக்கிறாரே ஓவியர்” என்று கலைஞர் கிண்டலடித்து விட்டு மாற்றங்களையும் சொல்லியிருக்கிறார். பரிதி, மணிமண்டப வேலைகளை பார்வையிடச் செல்லும்போது நானும் வரலாற்று ஆய்வாளர் வகுளா வரதராஜனும் அந்த பயணங்களில் சில முறை இணைந்திருக்கிறோம். அப்போதெல்லாம் மணிமண்டபக் கட்டுமானத்தில் கலைஞர் காட்டும் ஆர்வத்தை ஆச்சர்யக் குரலில் சொல்லி கொண்டு வருவார் பரிதி.

தங்க மோதிரத்தைக் கழற்றிப் போட்ட பரிதி
மாமல்லபுரத்தில் தமிழிசை மூவரின் சிலைகள் தயாராகி வந்தன. சிலை உருவாக்கத்தில், வார்ப்பில் (mould) உச்ச கட்ட கொதிநிலையில் இருக்கும் பஞ்சலோக (தங்கம்,வெள்ளி, செம்பு,பித்தளை,இரும்பு) கலவையை சேர்ப்பது முக்கியமான கட்டம். நல்ல நாள், நேரம் பார்த்து இந்த வேலையை செய்வார்கள்.
அந்த சமயத்தில் சிலை தயாரிக்கச் சொன்னவர் இருக்க வேண்டுமென்று சிற்பிகள் சொல்வார்கள். அந்த வகையில் குறிப்பிட்ட தினத்தன்று சிற்பி மணியம் அழைப்பின் பேரில் பரிதி மாமல்லபுரம் சென்றார். நானும் வரதராஜனும் இணைந்து கொண்டோம்.. சிற்பியின் கூடத்தில் பஞ்சலோக கலவை கொதித்துக் கொண்டிருந்தது.

அது உச்ச கட்டத்தை அடையும்போது சிற்பி பரிதியிடம், “நீங்கள் கூட இந்த கலவையில், உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு பஞ்சலோகத்தை போடலாம்” என்றார்.
நான் என்னிடமிருந்த பத்து, ஐந்து ரூபாய் நாணயங்களைப் போட்டேன். வரதராஜன் தன்னிடமிருந்த அமெரிக்க நாணயங்களை போட்டார்.
அடுத்து பரிதி… கண்ணிமைக்கும் நேரத்தில் எந்த யோசனையும் இல்லாமல் விரலில் இருந்த தங்க மோதிரத்தை கழற்றி உலோக கலவையில் போட்டார்.
நாங்கள் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது. அப்புறம் வழக்கம் போல தன் நகைச்சுவை பேச்சினால் சூழலை கலகலப்பாக்கினார் பரிதி.
கலைஞரின் வருத்தம்: ஸ்டாலின் போக்குவாரா?

2011 தேர்தல் தோல்வியால், பார்த்துப் பார்த்து கட்டிய மண்டபத்தை திறக்க முடியாமல் போனதே என்று பரிதிக்கு ஏக வருத்தம். நிச்சயமாக கலைஞரும் மிக்க வேதனை அடைந்திருப்பார். பின்னர் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மண்டபம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. வருடா வருடம் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் நடக்க வேண்டிய தமிழிசை மூவர் விழாவும் சரிவர நடக்கவில்லை.
திமுக ஆட்சியிலும்-கோவிட் காலத்துக்கு பிறகும், இதே நிலை தொடர்வதாகச் சொல்கிறார்கள் தமிழிசை ஆர்வலர்கள். சில மாதங்களுக்கு முன்னர் மண்டபத்தை பார்வையிட்ட “நாம் தமிழர்” சீமானும், ‘மண்டபம் பராமரிக்கப்படாமல் இருக்கிறது’ என்று அறிக்கை வெளியிட்டார்.
ஸ்டாலின் அவர்கள் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிய இந்த காலகட்டத்தில், தமிழிசை மூவர் மணிமண்டபத்தைப் பற்றிய செய்திகளை அவரது கவனத்துக்கு கொண்டு செல்வது நமது கடமையாகிறது.
கலைஞர் உருவாக்கிய தமிழிசை மூவர் மண்டபத்தை செம்மையாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் அங்கே மூவர் விழாவை முறைப்படி சிறப்பாக நடத்த தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழிசை மூவர் மணிமண்டபத்தை பொதுப்பணித்துறை மூலமாக புனரமைப்பு செய்ய 47 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருக்கிறது. பணிகள் விரைவுபெற்று தமிழிசை மூவர் மண்டபம் பொலிவு பெறுவதே தமிழன்பர்களின்- தமிழிசை ஆர்வலர்களின் ஏக்கமும் நோக்கமும்.
வேலைவாய்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் பணி!
தனுஷ் முதல் நயன்தாரா வரை! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்