தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர்களின் மரபுரிமையர்களுக்கு நூல் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையர்களுக்கு ரூ.15.32 கோடி நூல் உரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையர்களுக்கு ரூ.9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று கலைஞரின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து, கலைஞரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிதற்கான அரசாணையை, அவரின் மரபுரிமையரான துணைவியார் ராஜாத்தி அம்மாளை சந்தித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று (டிசம்பர் 22) வழங்கினார். அப்போது திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.பெ.சாமிநாதன், “கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்காக, நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில், கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் அரசின் சார்பில் அரசாணையை ஒப்படைத்தோம்.

பள்ளிப்பருவத்தில் “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கினார் கலைஞர். தொடர்ந்து திமுக தலைவராக முரசொலியில் தொண்டர்களுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதினார். இதற்கிடையில், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர்.
திரையுலகிலும் முத்திரை பதித்தவர். அதேபோல, 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இதுவரை 179 படைப்பாளர்களுடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கெல்லாம், அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாருக்கு பிறகு, இன்றைக்கு கலைஞரின் குடும்பத்தார் தொகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியதால், கட்டணம் இல்லாமல் கலைஞரின் படைப்புகள்h நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.
அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்த கலைஞர் குடும்பத்தார் அனைவருக்கும், தயாளு அம்மாள் குடும்பத்தாருக்கும், ராஜாத்தி அம்மாள் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் எழுத்தாளர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கலைஞரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டதற்கு எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வருகிற சென்னை புத்தகக் காட்சியிலேயே கலைஞரின் நூல்கள் பல்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் சூழல் இதனால் உருவாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய கல்வி கொள்கையால் நாடு முன்னேறியுள்ளது : வேலைவாய்ப்பு திருவிழாவில் மோடி பேச்சு!