கொடநாடு கொலை கொள்ளை விசாரணைக்கு தனிப்படையினர் முன்பு இன்று ஆஜராவதாக அதிமுக பிரமுகரும், முன்னாள் நமது அம்மா ஆசிரியருமான மருது அழகுராஜ் இன்று (ஆகஸ்டு 6) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நீலகிரி கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை நடந்தது. இதில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக சில மர்ம மரணங்கள் நடந்தன. இது தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மேற்கு மண்டல் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நீலகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் ஆஜராக இருப்பதாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியரும், அதிமுக பிரமுகருமான மருது அழகுராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவருடைய ட்விட்டர் பதிவில், ”கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று இன்று காலை கோவையில் ஆஜராகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர், ”பிரபல தொலைக்காட்சி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக புலன் விசாரணை வெளியிட்டது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் குற்றவாளிகளை கேரளாவில் போய் சந்தித்து அவர்களிடம் பேரம் பேசியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நான் பத்திரிகையாளர்களை சந்த்தித்து தமிழக அரசு இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி, விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் . அதன் அடிப்படையில் தனிப்படையினர் என்னை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். கால தாமதம் என்பது வழக்கின் உண்மைத் தன்மைகளையும், சாட்சியங்களையும் நீர்த்து போகச்செய்யும். புலனாய்வை வெளியிட்ட பத்திரிகையாளர்களையும் விசாரிக்க வேண்டும்” என்று கூறினார்.
–செல்வம்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று- வெற்றியை நோக்கி தன்கர்
Comments are closed.