மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.
மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து, வெற்றிபெற உதவுவது அந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது செய்த விஷயங்களும் இனி ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் செய்வதாக சொல்லக்கூடிய வாக்குறுதிகளும் தான்.
அந்தவகையில் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
அதில், “காங்கிரஸ் – திமுக ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களின் தார்மீக உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது முதன்மை வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ”விவசாயிகளுக்கு உதவும் வகையில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், ஆழ்துளை கிணறுகள் மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் காவிரி, வைகை, குண்டாறு, மலட்டாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை இணைத்து நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவோம்” என்று மக்களின் தேவைகளையும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.
முன்னதாக இன்று காலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ரோடு ஷோ நடத்தினார்.
கிருஷ்ணா திரையரங்கம் தொடங்கி சாலை மார்க்கமாக காந்தி சிலை வரை நடந்த ரோடு ஷோவில் பலாப்பழத்தில் வாக்களிக்குமாறு பதாகையை தூக்கி காண்பித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தொண்டர்கள் வழி நெடுகிலும் பாஜக கொடி மற்றும் பலாப்பழ சின்ன பதாகைகளை ஏந்தியவாறு மலர்களை தூவி வரவேற்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய ஜேபி நட்டா, “தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் திறமை வாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவர் எம்.பி.யாகி டெல்லிக்கு வர வேண்டும். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.” என்று பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு?