வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் ரூ.4,800 !
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழை பாதிப்பு குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (நவம்பர் 14) சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவ வழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்” என்று கூறினார்.
தொடர்ந்து பாதிப்புகளுக்கு எவ்வளவு நிவாரணம் என்பது குறித்துப் பேசிய அமைச்சர்,
மழை காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம்,
எருமை மாடு, பசு ஒன்றிற்கு ரூ. 30,000,
செம்மறி ஆடு, ஆடு, பன்றிக்கு ரூ.3,000,
எருது ஒன்றிற்கு ரூ.25,000,
கன்றுக்குட்டி ஒன்றிற்கு ரூ.16,000,
கோழி ஒன்றிற்கு ரூ.100 வழங்கப்படும்.
குடிசை வீடுகள் பகுதியாகச் சேதமடைந்தால் ரூ.4,100 மற்றும் முழுமையாகச் சேதமடைந்தால் ரூ.5,000 பணத்தோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டிருந்தால் 4,800 ரூபாய் வழங்கப்படும்.
அதுபோன்று கான்கிரீட் வீடுகள் பகுதியாகச் சேதமடைந்தால் ரூ.5,200, முழுமையாகச் சேதமடைந்தால் சமவெளியில் உள்ள வீடு ஒன்றிற்கு ரூ.95,000,
மலை பாங்கான பகுதிகளில் உள்ள வீடு ஒன்றுக்கு ரூ. 1,01,900 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முதல்வர் நேரடியாகக் கள ஆய்வு செய்துவிட்டு வந்த பிறகு இந்த தொகை உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், “விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய உதவி வழங்கப்படும்.
கடலூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 நிவாரணம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 52,251 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, படுக்கை வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மழையால் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு தினங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 100 சதவிகிதம் நீரை அகற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. எதிர்வரும் மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். மழை தொடர்பான பணிகளை முதல்வர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்” என்றார்.
பிரியா
“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” -ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி!
நீரில் மூழ்கிய பயிர்கள்: சீர்காழியில் முதலமைச்சர் ஆய்வு!