சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக மூத்த வழக்கறிஞர் கே..சந்திரமோகன், சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமன அறிவிப்பு தமிழக அரசின் பொது (சட்ட அதிகாரிகள்) துறையால் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்குப் பின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கும் புதிய நியமனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவி அளிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுகவிடம் கோரிக்கை வைத்திருந்தன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவரான கே.சந்திரமோகன் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு சென்னை திரும்பிய நிலையில்… வெளியான இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஏதும் செய்யவில்லை என்ற புகாரை இதுபோன்ற நியமனங்கள் குறைக்கும் என்றும் கூறுகிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை: 35 ஆண்டுகால பிரச்சனைக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு கண்ட ஸ்டாலின்