ஆளுநரை உடனே திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

அரசியல்

”தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற உடனடி நடவடிக்கை வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

”தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார்” எனக் குற்றஞ்சாட்டி, அவரை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், அக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய மனுவை, கடந்த நவம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு‌ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்று (நவம்பர் 17) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

‘‘பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும் தொடர்ந்து பேசிவருகிறார்.

பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து, ஒன்றிய அரசின் குரலாக ஒலித்து வருகிறார். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட வரைவுகளை முடக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு, இனி பொறுப்பதற்கில்லை என்ற சூழலில், குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்’’ என அதில் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

மோர்பி பாலம்: உயர்நீதிமன்றம் எழுப்பிய புதிய கேள்வி?

அண்ணாமலைக்கு வரவேற்பு: ரயிலை காக்கவைத்த பாஜகவினர்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *