“திமுகவுடன் காங்கிரஸ் ஒன்றுபடுவது இதில் மட்டும்தான்!”- கே.எஸ். அழகிரி
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கே.எஸ்.அழகிரி இன்று(நவம்பர் 14) மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய விடுதலைக்கு பிறகு நவீன இந்தியாவை கட்டமைத்த மாபெரும் தலைவர் பண்டித ஜவஹர்லால் நேரு.
அவரின் முயற்சியால்தான் இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இந்தியாவில் ஏகாதிபத்தியம் தலை தூக்காமல் இருந்தது.
நேரு இல்லாமல் போய் இருந்தால், இப்போது பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகள் போல இந்தியா இருந்திருக்கும். ஒருவர் தேசத்திற்காக அனைத்தையும் தொடங்கினார்.
இன்று மற்றொருவர் அனைத்தும் விற்று வருகிறார். இந்தியாவின் நட்சத்திரமாக விளங்கிய பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனத்தை மோடி விற்று, தனியார் நிறுவனமான ஜியோவை வளர்க்கிறார்.
ரயிலை மட்டுமல்லாது, ரயில் நிலையத்தையும் விற்று வருகிறது இந்த பாஜக அரசு” என்றார்.
இதேபோன்று நளினி உள்பட 6பேர் விடுதலை குறித்துப் பேசிய அவர், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6பேர் விடுதலை ஏற்று கொள்ள முடியாது.
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7பேருக்கு காட்டும் கரிசனத்தை சிறையில் பிற குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்று காத்திருக்கும் நபர்களுக்கு ஏன் அரசு காட்ட தயங்குகிறது?
தமிழகத்தில் கைதிகளாக 25ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமானவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளாக சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் இசுலாமியர்களை இந்த அரசு ஏன் விடுதலை செய்ய தயங்குகிறது?
இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? இது நாட்டிற்கு நல்லதல்ல.
கூட்டணி என்பது வேறு. அதனால் எல்லாவற்றிற்கும் அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் ஏராளமான கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருக்கிறது. மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் மட்டும்தான் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கலை.ரா
“வடிகால் வசதி சீரமைக்கப்பட்டதா?”: கடலூரில் முதல்வர் ஆய்வு!
தில் ராஜுவால் விஜய் படத்துக்கு சிக்கல்!