அண்ணாமலையின் பேச்சு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 8) தள்ளுபடி செய்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று பேசியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு தொடர்பாக, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், “இந்து கலாச்சாரத்திற்கு எதிராக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது போல, அண்ணாமலையின் கருத்து உள்ளது
ஐபிஎஸ் முன்னாள் அதிகாரியான அண்ணாமலை, சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார். அண்ணாமலையின் பேச்சு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது. பேட்டி அளித்து 400 நாட்கள் கடந்த பிறகு வன்முறை நடக்கவில்லை என்ற அண்ணாமலையின் வாதத்தை ஏற்க முடியாது.
அண்ணாமலையின் வீடியோ பதிவு எக்ஸ் தளத்தில் நிரந்தரமாக உள்ளது. வெறுப்பு பேச்சுக்கள் என்பது சரியான நேரத்தில் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டுகளை போல் செயல்படும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் எச்சரித்துள்ளது.
மதத்தின் நோக்கம் புரிந்து கொள்ளப்படாவிட்டால், அது நடுநிலை உணர்வையும் பகுத்தறிவு மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில் சிந்திக்கும் திறனையும் பறித்துவிடும். மதம் என்பது ஒரு அபின் என்று காரல் மார்க்ஸ் கிண்டலாகச் சொன்னதற்குக் காரணம் அதுதான்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டாட்சி தத்துவத்தின் சாம்பியனாக ஒருவர் இருந்தார்…. டெல்லியில் மோடியை விமர்சித்த பிடிஆர்
ஐந்து பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பதட்டத்தில் தமிழகம்!