அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒருமுறையும், சென்னை உயர் நீதிமன்றம் இரு முறையும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறையும் தள்ளுபடி செய்தன.
இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு 25ஆவது முறையாக விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர், புழல் சிறையிலிருந்தவாறு காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 26-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்…இந்திய வீரர்கள் அசத்தல்!
பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் வரவு : ராகுல் வாக்குறுதி!