நிதீஷ் குமாரைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 13) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார்.
நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்துக்குச் சென்றார்.
அப்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ராகுல் காந்தியிடமும், கார்கேவிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், “அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்தித்துப் பேச வேண்டும்” என்று கூறினார்.
கார்கே பேசுகையில், “மும்பையிலிருந்து வந்து எங்களுக்கு சரத்பவார் ஆலோசனை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேற்று நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து உரையாடினோம்.
இந்த நாட்டை காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசியல் சாசனம் மற்றும் பேச்சுரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டும். இதற்காக ஒன்றாக போராட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
ராகுல் காந்தி பேசுகையில், “இது ஆரம்பம் தான். அனைத்து கட்சியினரும் ஒன்றிணைவதில் உறுதியாக உள்ளனர்” என்றார்.
பிரியா
“உத்திரமேரூர் கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது”: மோடி
சபரிமலையில் நாளை சித்திரை விஷூ!