இலங்கைக்கு திரைப்பட இயக்குநராக சினிமா படம் எடுக்கப் போய் பிரபாகரனுடன் வெறும் 10 நிமிடம்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார் என்று அவர் முன்பாகவே அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை அண்ணாநகரில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்றது. அதில் அக்கட்சியைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசுகையில், “சீமான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை படம் எடுக்க இலங்கைக்குப் போய் ஷூட்டிங் மட்டும் எடுத்துவிட்டு திரும்பி வந்திருந்தால் உண்மையிலேயே இத்தனை பேருக்கான ஒரு தமிழ்த் தேசியத் தலைவராக சீமான் நமக்குள் புகுத்தப்பட்டிருக்கமாட்டார்.
அங்கே போய் ஒரு 10 நிமிட பேச்சு (பிரபாகரனுடன்) இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு காரணமாகி, அவரது அரசியலை நிலை பெறச் செய்யக் கூடிய மையப்புள்ளியாக இருந்தது. ஆனால் அவரது கனவு இன்னும் நிலைபெறாமல் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து மேடையேறிய சீமான் பேசுகையில், “இங்கே பேசிய என் தங்கை கூட சொன்னாங்க (காளியம்மாள்).. நான் படம் எடுக்கப் போனதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் எடுக்கப் போனவர்கள் வேற.. படம் எடுக்கிற குழுவினரை பயன்படுத்திக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போனது வேற.. அதன் நோக்கம் வேற.
படம் அவர்கள் எடுத்தார்கள்.. அந்த விழாவை திரைப்பட இயக்குநர் என்ற முறையில் நான் தொடங்கி வைத்தேன்.. படம் நான் எடுக்கவில்லை.
மற்றவர்கள் எல்லாம் நான் 8 நிமிடம் தான் பேசியதாக சொல்லுகிறார்கள்.. தங்கை கூடுதலாக 2 நிமிடம் சேர்த்து 10 நிமிடம் என்று சொல்லியிருக்கிறார்.
என்ன நடந்தது என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும். பக்கத்தில் இங்கே இருக்கிற பல போராளிகளுக்கும் தெரியும். அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை சொல்லிக் கொணடு இருக்கிறார்கள்.
10 நிமிடம் பேசியவனிடம்தான், “சீமான்ட்ட சொல்லு, அவனை நம்பி விட்டுட்டுப் போகிறோம்” என சொல்வார்களா?
எல்லாவற்றையும், எல்லா இடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் இருக்கும்போது, ‘அங்க போய் நான் என்ன செய்ய என்று அண்ணனிடத்தில் (பிரபாகரன்) இறுதியாக கேட்டேன். அதற்கு அவர், ”நீங்கள் அங்கு போய் இறங்குங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வந்துவிடும். அதை செய்யுங்கள்” என்றார். அதை தான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்” என்று சீமான் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தாது : முதல்வர் ஸ்டாலின்