செஸ் ஒலிம்பியாட்: 4 மாவட்டங்களுக்கு விடுமுறை!

அரசியல்

2022ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. அதில் போட்டி முன்னேற்பாடுகள் குறித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முதல்வரிடம் எடுத்து கூறினர்..

இந்த கூட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 துவக்க விழாவையொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 
இந்நிலையில் முன்னேற்பாடாக 7 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 198 மருத்துவர்கள் 74 செவிலியர்கள் உட்பட 433 பேர் இக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளை (ஜூலை 24 ) தமிழக செஸ் வீரர்களை கொண்டு மாமல்லபுரத்தில் பயிற்சிப் போட்டிகள் தொடங்கவுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 2, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. வீரர்கள் அரங்கத்துக்கு வந்து செல்லும் நேரங்களில் மட்டும் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் சிறியளவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக தமிழகத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிக தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே செஸ் விளையாட்டில் பங்கேற்க உள்ள வீரர்களில், முதற்கட்டமாக 22 வீரர்கள் இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளனர். துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு  ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நேரு ஸ்டேடியத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகம் வரும் வீரர்களுக்கு சிறந்த உபசரிப்பு வழங்கப்படும். தமிழகத்தின் விருந்தோம்பலை பற்றி சொல்லத் தேவையில்லை. அந்தந்த நாட்டு உணவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வேண்டும், அதன்மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார்” என கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *