மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல்!

அரசியல் இந்தியா

டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது.

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி கைது செய்தது.

அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி போராட்டம் நடத்தியது.

கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். பின்னர் மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மேலும் 2 நாட்களுக்கு சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் இனி போலீஸ் காவல் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில், “இப்போதைக்கு நாங்கள் காவலில் அவரை எடுக்கவில்லை. தேவைப்பட்டால் வரும் நாட்களில் எடுப்போம்.

இந்த விவகாரத்தை மணீஷ் சிசோடியாவின் ஆதரவாளர்களும், ஊடகங்களும் அரசியல் ஆக்குகின்றன” என்று வாதிடப்பட்டது.

சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோஹித், சிபிஐ வாதம் திகைப்பை ஏற்படுத்துகிறது. சிபிஐ ஊடகங்களுக்கு பயப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், “ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை தடுக்க முடியாது.

அவர்கள் ரிப்போர்ட் செய்வதை செய்யட்டும். அதுபோன்று ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடக்கும் வரை, அது நல்லது” என்றார்.

மேலும் சிறைக்குள் பகவத் கீதை, கண் கண்ணாடி, பென் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற சிசோடியாவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அவரை வரும் மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பிரியா

சென்னையில் தனியார் பேருந்துகளா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *