அதிமுக வழக்கு: யாருக்கு சாதகம்?

அரசியல்

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 2) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது அதிமுக சட்டவிதிகளுக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன், ’அதிமுக பொதுக்குழு செல்லாது’ என்று கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
இவ்வழக்கில், எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, ’தனி நீதிபதியின் தீர்ப்பில் தவறுகள் இருக்கிறது. தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனி நபர் பயனடையும் வகையில்தான் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

1.5 கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல. 1.5 கோடி தொண்டர்களின் எண்ணங்களை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி கூறியிருப்பது யூகத்தின் அடிப்படையிலானது.

ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில் அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியிருப்பது அசாதாரணமானது.

கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழுவே இறுதியானது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் தரப்பில், ’அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் ஒரே கட்சி அதிமுகதான்.

அடிப்படை உறுப்பினர்களைவிட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. இது சம்பந்தமான விதியைக் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார்.

தலைமைக் கழகத்தின் பெயரில்தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அனுப்பவில்லை. பொதுக்குழு கூட்டம் முறைப்படி கூட்டப்படவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகிவிடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை.

கட்சி விதிகளில் திருத்தம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குதான் அதிகாரம் உள்ளது.

மாவட்டச் செயலாளர்கள்தான் ஒற்றைத் தலைமை கோரியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்சி துவங்கிய 1972ல் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாது என விதி உள்ளது.

ஆனால் 2017ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டபோது இரு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு 2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் செயற்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது’ என்று வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட இருக்கிறது.

இந்த வழக்கு குறித்து சிலர், ‘இன்று வரப்போகும் தீர்ப்பால் அதிக சந்தோஷத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இருக்கிறதாம்.

என்றாலும், எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த தீர்ப்பு மூலம் சில சாதகங்கள் வரலாம். தீர்ப்பைப் பொறுத்து இருவரில் ஒருவர் மீண்டும் மேல்முறையீடு செய்வர்” என்கின்றனர்.

பிரியா, ஜெ.பிரகாஷ்

விநாயகர் சிலைகள் அனுமதி: கடும் சிரமத்தில் தமிழக போலீசார்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *