முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது முறையாக ஜாமீன் கோரிய வழக்கில் நாளை (பிப்ரவரி 28) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ‘அமலாக்கத் துறை டிஜிட்டல் ஆவணங்களை திருத்தியுள்ளது’ என வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் தனது வாதத்தில்,
“டிஜிட்டல் ஆவணங்கள் திருத்தப்பட்டதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறும் குற்றச்சாட்டு தவறானது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், இன்னும் செல்வாக்கு மிக்கவராகவே இருக்கிறார்.
அதனால், ஜாமீனில் வெளியே வரும் பட்சத்தில் சாட்சிகளை கலைக்கக் கூடும். எனவே அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது” என்று வாதிட்டார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 21ஆம் ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், “நேரடியாக செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. முறைகேடுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அமலாக்கத்துறை ஆவணங்களை திருத்தியுள்ளது. நிபந்தனை விதித்தால் அதற்கு கட்டுப்பட தயார்” என செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத் துறை தரப்பு, “ஆவணங்களில் எந்த திருத்தமும் செய்யவில்லை. அவர் சுமார் 2,900 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் சேகரித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன” என வாதிட்டது.
அத்துடன் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது முறையாக ஜாமீன் கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மோடி முன்னிலையில் அண்ணாமலை வேண்டுகோள்!
”எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா தான்” : அப்படி என்ன பேசினார் மோடி?
அருண் விஜய், அருள்நிதியுடன் நேரடியாக மோதும் கவின்?