அதிமுக பொதுக்குழு- எடப்பாடி அப்பீல்: நாளை தீர்ப்பு!

அரசியல்

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

ஜூலை  11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரியமா சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆகியோர்  ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் தனி நீதிபதியின் தீர்ப்பில் தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி  கூறியுள்ளது தவறு என தெரிவித்தனர்.

ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று வாதிட்டனர்.

அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என்ற அடிப்படையில் இரு பதவிகளும் நீடிப்பதாக கருதி ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு நாளை(செப்டம்பர் 2) அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கலை.ரா

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.