பொன்முடிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது போன்று தமிழ்நாடு அமைச்சர்கள் 11 மீது இன்னும் தீர்ப்புகள் வர உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். Judgement awaiting for 11 more ministers
தமிழ்நாடு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த ஆய்வறிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை சந்தித்து வழங்குவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 21) டெல்லி சென்றுள்ளார்.
பொன்முடி தீர்ப்பினை வரவேற்கிறோம்!
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து அவர் அளித்த பேட்டியில், “அமைச்சர் பொன்முடி மீது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை நாங்கள் வரவேற்கிறோம்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நான் DMK Files 1 வெளியிட்டேன். அதில் இடம்பெற்றிருந்த பினாமி நிறுவனங்கள் கூட அமைச்சர் பொன்முடி வழக்கில் இடம்பெற்றுள்ளது. அவர் மீது மைனிங் வழக்கு என இன்னொரு வழக்கும் உள்ளது. அதற்கும் கூடிய விரைவில் தீர்ப்பு வர வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம்.
பொன்முடி தவிர்த்து, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, முத்துசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 11 மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு 13 ஆண்டுகள் காலம் தாழ்த்தி தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொன்முடி வழக்கு தீர்ப்பு என்பது ஒரு வித்தியாசமான சூழலில் வந்திருக்கக்கூடிய தீர்ப்பு. இலாகா இல்லாத அமைச்சராக ஒருவர் புழல் சிறையில் உள்ளார். புதிதாக இன்னொரு வழக்கில் இன்று தீர்ப்பு வந்து மற்றொருவர் பதவி இழக்கிறார்.
இது மட்டுமின்றி இன்னும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் இதுபோன்ற வழக்குகளை சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் இன்று ஊழல் என்பது ஒரு பேசும் பொருளாக உள்ளது. 33% அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
எங்கே தேவையோ அங்கே செல்கிறார்!
தமிழ்நாட்டில் மழை மட்டும் இல்லாமல் எந்த சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் பிரதமர் இங்கு வரவேண்டும் என்று தான் பாஜக விரும்புகிறது. ஆனால் பிரதமரை பொறுத்தவரை எங்கே தேவையோ அங்கே செல்கிறார்.
இந்தியாவை பொருத்தவரை பிரதமரை பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதற்கு அனுமதி தெரிவித்த பிறகு தான் அவரை பார்க்கச் செல்வார்கள். ஆனால், தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லிக்கு வேறு வேலையாக சென்று விட்டு பிரதமரை சந்தித்து விட்டு வந்தார். எனினும் அதற்கு பிரதமர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் முதல்வருக்கு நேரம் ஒதுக்கி பேசினார்.
நேரம் கிடைக்காததால் தமிழகத்திற்கு பிரதமர் வர முடியாமல் உள்ளார். அவருக்கு பல்வேறு வேலைகள் உள்ளது. அதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவால் இந்தியா கூட்டணி உடையும்!
அமைச்சர் ரகுபதி இந்தியா கூட்டணி 2024ல் ஆட்சிக்கு வந்தால், அண்ணாமலை தான் முதலில் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு செல்வார் என்று கூறியுள்ளார். ஆனால் என்னை பொருத்தவரை 2024ல் INDIA கூட்டணி இருக்காது.
யூபிஏ கூட்டணி பிரிந்ததற்கு காரணம் திமுக தான். அவர்கள் மட்டும் மொத்தம் சுமார் 40 சதவீத ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினர்.
தற்போது இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு சென்ற முதல்வருக்கு, தான் இந்தியில் பேசியதை மொழிபெயர்ப்பு செய்ய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கத்தில் பேசும் பிரதமர் கூட தன் பேச்சினை தமிழில் மொழிபெயர்த்தார். ஆனால் இந்தியா கூட்டணிக்குள் அதனால் பிளவு ஏற்பட்டுள்ளது.
அதனால் நான் சொல்கிறேன். இந்தியா கூட்டணியும் திமுகவால்தான் உடைய போகிறது. அதேநேரத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 எம்.பிக்களுடன் பெரும்பான்மை வெற்றி பெறும்.
இடைநீக்கம் செய்யக் கூடாது என விதிமுறைகள் உள்ளதா?
நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம். தேவையற்ற விவாதம் அவசியமற்றது. முறைப்படி தான் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் இடைநீக்கம் செய்யக் கூடாது என விதிமுறைகள் உள்ளதா? 1989 ஆண்டும் இதேபோல் ஒரே நாளில் அதிகபட்சமாக 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கலான் ரிலீஸ் தேதி மாறுகிறதா?
Judgement awaiting for 11 more ministers