மைசூரில் இருக்கும் ஒரு பகுதி பாகிஸ்தானில் இருக்கிறது என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் இரண்டு நாட்களுக்குள் தங்களிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா சமீபத்தில் விசாரித்த இரண்டு வழக்குகளின் காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
அதில் ஒரு காணொலியில் நீதிபதி ஸ்ரீஷானந்தா, வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பின் சார்பாக வாதாடும் வழக்கறிஞரிடம் “ உங்கள் கட்சிக்காரர் வருமான வரி செலுத்துகிறவரா?” என்று கேட்கிறார்.
நீதிபதியின் இந்த கேள்விக்கு எதிர்த்தரப்பு பெண் வழக்கறிஞர் குறுக்கிட்டு, “ஆம் அவர் வருமான வரி செலுத்துபவர்தான்” என்று பதிலளிக்கிறார்.
இந்த குறுக்கீட்டால் எரிச்சல் அடைந்த நீதிபதி ஸ்ரீஷானந்தா, அந்த பெண் வழக்கறிஞரிடம் “ இருங்கம்மா, ஏன் இப்படி அவசரப்படுறீங்க. உங்களுக்கு எதிர்தரப்பினர் பற்றி அனைத்து விஷயமும் தெரியும் போல. விட்டால் அவர் என்ன நிறத்தில் உள்ளாடைகள் அணிந்திருக்கிறார் என்பதைக் கூடச் சொல்வீர்கள் போல” என்று சொல்கிறார்.
இதே நீதிபதி மற்றொரு காணொலியில், “மைசூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மேம்பாலம் பக்கத்தில் இருக்கும் பகுதி பாகிஸ்தானில் உள்ளது, இந்தியாவில் இல்லை. அதுதான் உண்மை” என்கிறார்.
ஒரு நீதிபதியே சிறுபான்மையினர் குறித்தும், பெண்கள் குறித்தும் இப்படி அவதூறாக பேசலாமா என்று சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கண்ணா, பிஆர்.கவாய், எச்.ராய் மற்றும் எஸ்.கந்த் கொண்ட அமர்வு இன்று தாமாக முன்வந்து விசாரித்தது.
விசாரணையின் முடிவில் “ இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் ஆலோசித்துவிட்டு, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் இரண்டு நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பின் சில அடிப்படை வழிகாட்டுதல்களை இந்நீதிமன்றம் வகுக்கும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆடிப்போன ஐ.எஸ்.எல்: பந்தை கைப்பற்றும் சாக்கில் எதிர் அணி வீரரின் தலையை உடைத்த வீரர்!
வேலுமணி மீது வழக்கு… அந்தர் பல்டி அடிக்கும் விஜிலென்ஸ்… எடப்பாடி காட்டம்!