கடுமை காட்டிய நீதிபதி : மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்துகள் நீக்கம்!

Published On:

| By Kavi

மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகளை நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் நீதிபதி ஆர். சுப்ரமணியன் கடுமையாக நடந்துகொண்டார்.

“சீப் ட்ரிக்ஸை எல்லாம் நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறீர்கள். இப்படி நான்சென்சாக நடந்துகொள்வதை என்னோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டு கொம்புகள் இல்லை. நீங்கள் ஆர்டினரி லாயர். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்” என்று கடுமையாக பேசியிருந்தார் நீதிபதி சுப்ரமணியன் .

அப்போது “உங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மன்னிப்பு கேட்டார் மூத்த வழக்கறிஞர் வில்சன்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, பரப்பப்படுகின்றன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரலிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதோடு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவி்ல், “வழக்கிலிருந்து தனி நீதிபதியை விலகுமாறு கேட்கவில்லை. மூத்த வழக்கறிஞர் வில்சன் மீதான கருத்துக்களை நீக்க வேண்டும். நீதிமன்ற விசாரணை காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி விக்டோரியாகவுரி முன்பு இன்று (அக்டோபர் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜரானார்.
அவர், “இந்த வழக்கிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கேட்கவில்லை. அவர், நீதிமன்றத்தின் மேல் உரிய மரியாதை வைத்துள்ளார். மனுதாரர்கள் சொல்வதையே நீதிமன்றத்தில் கூற முடியும்” என்று தெரிவித்தார்.

“மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நீதித்துறைக்காகவும், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்” என்றும் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.

அப்போது நீதிபதி ஆர்.சுப்ரமணியன, “நீதிமன்ற காட்சிகள் வெளியானது குறித்து சைபர் கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது. யார் பதிவு செய்தார்கள் என்பதை ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவோம்” என குறிப்பிட்டார்..

அந்த வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும், மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியிலிட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

பிரியா

தீர்வை நோக்கி சாம்சங் போராட்டம்?

தொடரும் சிக்கல்… தவெக மாநாடு நடைபெறுமா?

தமிழ் தலைவாஸ் வாங்கிய 2.15 கோடி வீரர்… 18 ஆம் தேதி களைகட்ட போகும் புரோ கபடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel