judge jayachandran is legal secretary in the AIADMK regime
பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் பதியப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து இன்று (டிசம்பர் 21) சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இதைதொடர்ந்து, பொன்முடி வழக்கில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அமைச்சராக இருந்தபோது பொன்முடி மீது அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை என்று நிரூபித்து அவருக்கு விடுதலை தரப்பட்டது.
இந்த விடுதலையை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன், கீழமை நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை ரத்து செய்தார். பொன்முடியையும், அவரது மனைவியையும் நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லியிருந்தார். அதன்படி இன்று ஆஜரானார்கள்.
இத்தனை வருட பழைய வழக்கு என்பதாலும், 2011ல் இருந்து இதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்ததாலும். அவருடைய வயதை கருத்தில் கொண்டும், கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து, அதை உயர் நீதிமன்றம் மாற்றி எழுதியிருக்கிறது போன்ற காரணங்களாலும் 3 வருட சாதாரண சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
அந்த சிறை தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இந்த மேல்முறையீட்டு வழக்கில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்று நம்புகிறோம். ஏனென்றால் பொன்முடியை பொறுத்தவரை, இந்த வழக்கு தொடுக்கும் போது வெறும் 4.80 லட்சம் ரூபாய்தான் கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது.
ஆனால் அவருடையை மனைவி விசால் ஆட்டோ மற்றும் பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு 5 கோடி ரூபாய் வரை வியாபாரம் இருப்பதாக வருமான வரித்துறையால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் நீதிமன்றம் ஏன் இவர்களின் விடுதலையை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்தது என்றால், பொன்முடியின் மனைவி ஒழுங்காக வருமான வரி செலுத்தவில்லை. விசால் ஆட்டோ என்பது கடலூரில் உள்ள மிகப்பெரிய டூவீலர் விற்பனை நிலையமாகும்.
பொன்முடி மீது 2006-11ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது. 1996-2001ல் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இன்னொரு வழக்கு பதியப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களை எடுத்து பார்த்தோமானால், பொன்முடியின் மனைவிக்கு குடும்ப சொத்தாக மட்டும் 100 ஏக்கர் நிலம் சித்தூரில் இருந்ததும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அவரது சகோதரர்கள் மிக அதிகளவில் பணம் கொடுத்ததும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த சாட்சியங்கள் இந்த வழக்கில் எடுத்து வரப்படவில்லை. இருந்தாலும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் விசாலாட்சி மிக லாபகரமாக தனது நிறுவனத்தை நடத்தி வந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். 5 கோடி ரூபாய்க்கும் மேலாக ஒரு வருடத்துக்கு வியாபாரம் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உயர் நீதிமன்றம் குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஒரு முடிவுக்கு வந்து விடுதலையை ரத்து செய்திருக்கிறது.
நிச்சயம் மேல்முறையீடு செய்து பொன்முடிக்கு விடுதலையை பெற்றுத் தருவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களை பொறுத்தவரை நீதிபதி எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின்படி அவர் சட்டத்துறை செயலாளராக அதிமுக ஆட்சியில் இருந்தார். அப்போது இந்த வழக்கில், சொத்துகளை முடக்கம் செய்வது குறித்தான கோப்புகளை கையாண்டிருக்கிறார்.
இது வழக்கை நடத்தும்போது எங்களுக்கு தெரியவரவில்லை. நேற்றைக்குதான் அது பொன்முடிக்கு தெரியவந்தது. இதை நீதிபதியிடம் சொன்னோம். இதை அப்போதே சொல்லியிருந்தால் கூட இந்த வழக்கில் இருந்து விலகியிருக்கமாட்டேன் என்றார் நீதிபதி. இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்சினையே.
இந்த பிரச்சினையையும் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்வோம். இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, பொன்முடி வருமானத்துக்கும், அவரது மனைவி வருமானத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளார், இரண்டாவது, இந்த சொத்துகள் பொன்முடி வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களை தன்னால் திரட்ட முடியவில்லை என்று புலன் விசாரணை அதிகாரி கீழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனடிப்படையில் தான் பொன்முடிக்கு விடுதலை வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தப்பட்டால், பொன்முடியின் தகுதியிழப்பு நீங்கிவிடும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பதவி இழந்த பொன்முடி… ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!
ஒரு மணி நேரம் உலகை உலுக்கிய ’எக்ஸ்’ தளம்!
judge jayachandran is legal secretary in the AIADMK regime