அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையின் போது கட்சி விதிகளை தமிழில் படியுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கேட்டார்.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 3 ஆவது நாளாக நடந்து வருகிறது. நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, கிருத்திகேஷ் ராய் அமர்வில் இன்று (ஜனவரி 6) விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. “அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகும் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
ஜெயலலிதா கட்சியை கையில் எடுத்தபிறகு சட்ட விதிகளுக்கு உட்பட்டே இதுவரை அதிமுக செயல்பட்டு வந்தது. தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலமாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. கட்சி விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஈபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்தினார்.
விதிகளின்படி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொதுக்குழு நடத்தவேண்டும். கோரிக்கை கடிதம் வந்த பிறகு, 30 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும். மேற்படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும்.
இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட முடியாது என ஜூன் 28 ல் ஈபிஎஸ் தான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அவரின் ஒருதலைப்பட்சமான முடிவால் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லாமல் போகுமா?” என்று அடுக்கடுக்கான வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
விசாரணையின்போது பொதுக்குழு தொடர்பான கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி கூறினார். அதன்படி மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் அதனை வாசித்தார்.
இதேபோன்று மேற்படி மற்றும் கூட்டம் என்றால் ஆங்கிலத்தில் என்ன என நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கேள்வி எழுப்பினார்.
கட்சி விதிகளை மேற்கோள் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ள, பொதுக்குழு கூட்டம் தொடர்பான உத்தரவின் முக்கிய வார்த்தைகளை உரிய மொழி பெயர்ப்புடன் வழங்கவும் அறிவுறுத்தினார்.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதங்களை வைத்து வருகிறது.
கலை.ரா
டி20 கிரிக்கெட்: இந்தியா கோட்டை விட்டது எங்கே?
“திமுக ஆட்சி தமிழ் ஆட்சி தான்” – முதலமைச்சர் பெருமிதம்!