அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை தானே விசாரிக்கப்போவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் மாற்றம் தொடர்பான உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவு குறித்து, வழக்கில் நீதிமன்ற பதிவுத் துறையை சேர்த்து, விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும்.
இதுபோன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன்படி எந்த நீதிபதி வழக்கை விசாரிப்பது என தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார். எனவே வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் நிர்வாக முடிவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்குத் தொடர்பான ஆவணங்களும் எங்களுக்கு வழங்கப்படவில்லை” என வாதிட்டார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி மீதான வழக்கை தாமே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 14) விசாரணைக்கு வந்த போது, பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தானாக முன்வந்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துவிட்டார்.
இந்த வழக்கை தானே விசாரிக்கப்போவதாக தெரிவித்த நீதிபதி விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிரியா
முடங்கிய இண்டர்காம் சிஸ்டம்… தவிக்கும் கைதிகள்… கவனிக்குமா அரசு?
ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்!