சொந்தக் ’காலில்’ நிற்கும் பாஜக: தமிழகம் வரும் நட்டா 

Published On:

| By Aara

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே  வெளிப்படையான மோதல் நிலவி வரும் நிலையில், பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி. நட்டா மார்ச் 10 ஆம்  தேதி தமிழ்நாடு வருகிறார்.

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வரும் நட்டா,  அங்கே கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தைத் திறந்து வைக்க இருக்கிறார்.

கிருஷ்ணகிரியில் இருந்தபடி  தமிழகத்தின்  பத்து மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை காணொலியில் திறந்து வைக்க இருக்கிறார் நட்டா.

இதுகுறித்து தமிழக பாஜகவின்  துணைத் தலைவரும் கட்டிடங்கள் குழு தலைவருமான சக்கரவர்த்தியிடம்  மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு கேட்டோம்.

“பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10 ஆம் தேதி கிருஷ்ணகிரி வருகிறார். மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை  நேரடியாக திறந்து வைக்கிறார்.

மேலும் அங்கிருந்தபடியே தமிழ்நாட்டின்  வெவ்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட பாஜக மாவட்ட அலுவலகங்களையும்  திறந்து வைக்கிறார்.

தர்மபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய பத்து மாவட்டங்களில்  சொந்த பாஜக அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தேசிய தலைவரும், மாநில தலைவரும் கிருஷ்ணகிரியில் இருந்து  இந்த விழாவில் பங்கேற்கும் அதேநேரத்தில்…  தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பத்து மாவட்ட பாஜக அலுவலகங்களிலும் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

அந்த வகையில் திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் பங்கேற்பார்.  தூத்துக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி பங்கேற்பார். மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் விழுப்புரத்தில் பங்கேற்கிறார்.

இதுபோல ஒவ்வொரு முக்கிய நிர்வாகியும் பத்து மாவட்ட அலுவலகங்களிலும் துவக்க விழாவில் இணைந்துகொள்வார்கள். நான் பாஜக மாநில கட்டிடங்கள் பிரிவு தலைவர் என்ற வகையில் கிருஷ்ணகிரியில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறேன்” என்ற சக்கரவர்த்தியிடம்,

“இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களில் பாஜகவுக்கு சொந்த கட்டிடங்கள் இருக்கின்றன?: என்று கேட்டோம்.

“தமிழக பாஜகவுக்கு மாவட்ட அலுவலகங்கள் ஏற்கனவே நான்கு சொந்தமானவையாக இருக்கின்றன. பிறகு  நான்கு மாவட்டங்களில்  கட்டினோம். இப்போது மார்ச் 10 ஆம் தேதி பத்து மாவட்ட  அலுவலகங்களை கட்டித் திறக்க இருக்கிறோம்.

இன்னும் பத்து அல்லது பதினைந்து மாவட்ட அலுவலகங்களை விரைவில் கட்டி முடித்து திறப்போம். தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஒரே நேரத்தில் பத்து மாவட்டங்களில் சொந்த கட்டிடத்தில் அலுவலகத்தைத் திறந்ததில்லை. அந்த சாதனையை இப்போது பாஜக செய்கிறது” என்றார் சக்கரவர்த்தி.

கிருஷ்ணகிரியில் நடக்கும் இந்த நிகழ்வில்  மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர்  ரெட்டி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்,  தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆக்யோரும் கலந்துகொள்கிறார்கள். 

தமிழ்நாட்டில் பாஜக சொந்தக் காலில் நிற்குமா என்ற கேள்விகள் இப்போது அதிமுக கூடாரத்தில் இருந்தே  கேட்கப்பட்டு வரும் நிலையில்… பத்து மாவட்டங்களில் சொந்தக் காலில் நிற்கும் கட்டிடங்கள் என்று சத்தமில்லாமல் இந்த சாதனையை செய்திருக்கிறது பாஜக.

வேந்தன்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் ரூ.430 கோடி மதிப்பில் கழிவறைகள்!

வாத்தி ரூட்டில் அகிலன்: ரெட் ஜெயண்ட் ஒதுக்கப்படுகிறதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share