சென்னையில் இன்று (பிப்ரவரி 11) நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மாலை 5.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை, விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன்,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்பட 17 பேர் வரவேற்றனர்.
அதன்பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் அருகே தங்கசாலை ஏழுகிணறு பகுதிக்கு ஜேபி நட்டா காரில் சென்றார்.
முன்னதாக ஏழுகிணறு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பாதயாத்திரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாதயாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், ஜேபி நட்டா, அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் வாகனத்தில் ரதயாத்திரை சென்றனர்.
தங்கசாலை பகுதியில் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், வீதிகள் வெறிச்சோடி கிடந்தது. இதனால் ரதயாத்திரையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
பாதயாத்திரைக்கு மாறாக ரதயாத்திரை சென்றதால், பாஜக தேசிய தலைவர் நட்டா, அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது என்ன வழக்கு போடுவது என்று வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை வந்தடைந்தார் ஜேபி நட்டா