தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் நவம்பர் 28ஆம் தேதி சென்னை திரும்பவிருக்கும் நிலையில் மறுநாளே கட்சி கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.
அங்கு சென்றாலும் தனது சமூக வலைதளம் மூலம் தமிழகத்தில் ஆக்டிவாக இருந்தார் அண்ணாமலை. அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது தொடங்கி சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பாலாஜி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது வரை பல நிகழ்வுகள் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
லண்டனில் படிப்போடு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அண்ணாமலை, அரசியல் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வைரலாகின.
லண்டனில் இருந்தாலும் தமிழக பாஜகவில் நடக்கும் விவகாரங்களை கண்காணித்து வரும் அண்ணாமலை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த லண்டனில் இருந்தவாறே திட்டமிட்டு வருகிறார்.
இதுதொடர்பாக அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “வரும் அக்டோபர் 28ஆம் தேதி அண்ணாமலை சென்னை திரும்புகிறார். அவரை சிறப்பாக வரவேற்க தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை வரும் அண்ணாமலை, மறுநாளே (நவம்பர் 29) சென்னை பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தவுள்ளார். அன்று இரவே கோவை செல்லும் அண்ணாமலை, நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆகிய தேதிகளில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இதையடுத்து ஜனவரி இரண்டாம் வாரத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, மண்டல, மாநில பொறுப்பாளார்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், பாஜகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினை, அவர் லண்டன் சென்ற பிறகு பாஜகவில் நடந்த விவகாரங்கள் ஆகியவற்றை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவுள்ளார். உட்கட்சி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி முதல் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வது, கட்சி உறுப்பினர் சேர்க்கை, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் வாங்கிய பூத்துகள், குறைவான வாக்குகள் பெற்ற பூத்துகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தல் என ஒரு வருடத்துக்கான திட்டத்துடன் சென்னை வருகிறார்” என்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் உள்ள பிறக்கட்சிகள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும், துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கள ஆய்வு குழுவை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிதாக கட்சித் தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய்யும் 2026 தேர்தலை இலக்காக வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை. இதனால் வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
இந்தியன் ரயில்வே 96 சதவிகிதம் மின்மயம்… டீசல் இன்ஜீன்கள் என்ன ஆகும்?
பவகத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற அக்மார்க் அமெரிக்கர்… யார் இந்த துளசி?
Comments are closed.