திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தேர்தல் முடிந்து அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில், ‘டெல்லியின் கர்ஜனை மொழி’ என்ற அடைமொழியோடு கனிமொழியை அழைத்து துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
*54 வயதான கனிமொழி கட்சியில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் பொறுப்பாளர், மகளிரணிச் செயலாளர் என்ற பொறுப்புகளைத் தொடர்ந்து இப்போது துணைப் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார்.
*சென்னை சர்ச் பார்க் ப்ரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை படித்த கனிமொழி பிறகு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் தனது முதுநிலை பட்டத்தை பெற்றார்.
*கல்லூரிப் படிப்பு முடித்ததும் தன் தந்தையைப் போலவே பத்திரிகையாளராக விரும்பினார். கனிமொழி இலக்கிய ஆர்வமும், பத்திரிகை ஆர்வமும் மிக்கவர். ஆங்கிலத்திலும் பேரார்வம் கொண்டவர். அந்த அடிப்படையில் தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். முதல்வரின் மகள், பெரிய கட்சித் தலைவரின் மகள் என்ற எந்த கிரீடத்தையும் தன் தலையில் சுமக்காமல்…. ஓர் எளிய பத்திரிகையாளராக பொது வாழ்க்கையைத் தொடங்கினார் கனிமொழி.
*தி இந்து உதவி ஆசிரியர், குங்குமம் பொறுப்பாசிரியர், சிங்கப்பூரில் இருந்து வெளியான தமிழ் முரசு ஆசிரியர் என்று பத்திரிகைப் பணியை மேற்கொண்ட கனிமொழி இலக்கிய உலகிலும் முத்திரை பதித்தவர். சிகரங்களில் உறைகிறது காலம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி, கருவறை வாசனை போன்ற கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டார். கலைஞரின் இலக்கிய முகமாக விளங்குகிறார் என்று பாராட்டப்பட்டார் கனிமொழி. இப்போது இந்து பத்திரிகை தொழிற்சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் கனிமொழி.
*கனிமொழிக்கு பத்திரிகை. இலக்கியத்தில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை கலைஞர் வீட்டில் அவ்வப்போது கனிமொழியோடு விவாதங்களையும் உரையாடல்களையும் நடத்துவார். பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகளோடு உரையாடல் நடத்தும் போது கனிமொழியையும் அழைத்து தன் பக்கத்திலே உட்கார வைத்துக் கொள்ளுவார். துரைமுருகன், ஆற்காட்டார் போன்றவர்கள் தலைவரே தலைவரே என்று கலைஞரை அன்பொழுக அழைப்பார்கள். அவர்களை வைத்துக் கொண்டே கனிமொழியிடம், ‘இவங்கள்லாம் என்னை தலைவர்னு சொல்றாங்க. உன் தலைவர் யாரு?’ என்று கனிமொழியிடம் கேட்டிருக்கிறார் கலைஞர். அப்போது கனிமொழி, ‘என் தலைவர் பெரியார்’ என்று பதில் சொல்ல…. மகளை உச்சி முகர்ந்த கலைஞர், ‘எனக்கும் அவர்தான் தலைவர்’ என்று சொல்லியிருக்கிறார்.
*இலக்கியம், பத்திரிகை மட்டுமல்ல தனது பகுத்தறிவும் கனிமொழிக்கு வாய்த்திருக்கிறது என்பதை உணர்ந்த கலைஞர்… கனிமொழியை முதன் முதலில் திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் செயலாளராக்கினார். பிறகு மகளிரணிச் செயலாளர் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக நடத்தினார்.
*கட்சிப் பொறுப்புகள் ஒருபக்கம் என்றால் 2007 ஆம் ஆண்டு கனிமொழியை நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக தேர்வு செய்தார் கலைஞர். ஆறு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய கனிமொழியை மீண்டும் 2013 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு அனுப்பினார்.
மாநிலங்களவையின் இரண்டாவது பதவிக் காலம் முடிவதற்குள் அதாவது 2020க்கு முன்பே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் களமிறங்கி, அன்றைய தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தோற்கடித்தார் கனிமொழி.
இவரது நாடாளுமன்ற பணிகளுக்கு சான்றிதழாக வேதியியல் உரம் நிலைக்குழுத் தலைவர் பதவியை அடுத்து தற்போது ஊரக மேம்பாடு பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2011 ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 193 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் விடுதலையானார். 2017 ஆம் ஆண்டு 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் கனிமொழி.
*பத்திரிகை, இலக்கியம் தாண்டி சமூக சேவையில் இளம் பெண்ணாக இருக்கும்போதே ஆர்வம் மிக்கவர் கனிமொழி. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளின் சமூக பிரச்சினைகளை களைவதற்காக விழிப்புணர்வுப் பணிகளை செய்தார். கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்காக கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து ’கருத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
*நாட்டுப் புறக் கலைகளை நசிந்துவிடாமல் காப்பாற்றுவதற்காக சென்னை சங்கமம் என்ற பெயரில் சீரான ஒழுங்கமைவோடு பல்வேறு நாட்டுப் புறக் கலைஞர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தையும் கலைகளையும் காப்பாற்றினார். அதையே இப்போது நெய்தல் என்ற பெயரில் தூத்துக்குடியில் தொடங்கியிருக்கிறார் கனிமொழி.
*கலைஞரின் 85 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுதும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையற்ற இளைஞர்களைத் தேடிச் சென்று தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் கனிமொழி.
தந்தை பெரியார் வழியில், யார் எங்கே பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாதிப்பு ஏற்படுத்தும் ஆதிக்க வாதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கனிமொழி.
–ஆரா
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி… அதுதான் என் நிலைமை : மு.க.ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு துரைமுருகன் வழங்கிய பரிசு!
வாழ்க கனிமொழி!
எங்களில் ஒருவர் கனிமொழி