பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இன்று (செப்டம்பர் 11) தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அச்சுப் பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன் தற்போது அறம் ஆன் லைன் என்ற இணைய தளத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை தனது இணைய இதழில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
”சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில் அந்த மாணவி எழுதியதாக ஒரு கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அந்த கடிதமே போலி” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டு, ‘போர்ஜரி கடிதம் பொய்க்கு துணை போகிறதா அரசாங்கம்?’ என்ற தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விசாரணை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்துகொண்டிருப்பதால் அதுபற்றி இணை விசாரணை நடத்தவும், சமூக தளங்களில் விசாரணையை பாதிக்கும் வகையில் தகவல்களை வெளியிடவும் சிபிசிஐடி போலீஸார் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
இதை மீறும் வலை தளப் பதிவுகள் நீக்கப்படும் என்று பதிவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இன்று (செப்டம்பர் 11) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை சென்னை அடையாறில் உள்ள வீட்டில் கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு போலீஸார் அழைத்துச் சென்றிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குறிப்பிட்டிருக்கிறார்.
“ஊடகவியலாளர் சாவித்ரி கண்ணன் அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது காவல்துறை. வீட்டிலிருந்த அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஊடகவியலாளரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் வன்னியரசு.
–வேந்தன்
கள்ளக்குறிச்சி கலவரம்: சேதமடைந்த பொருட்களின் மதிப்பு என்ன?