தேர்தல் வெற்றி… செந்தில் பாலாஜியை சந்திக்க முடியவில்லை: ஜோதிமணி வருத்தம்!

அரசியல்

செந்தில் பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க முடியாதது வருத்தமளிக்கிறது என்று ஜோதிமணி எம்.பி இன்று (ஜூன் 23) தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் புழல் சிறையில் இருந்தபடியே திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் அறிவுரைகளை வழங்கி கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்கொள்ள வழிகாட்டி இருந்தார் செந்தில் பாலாஜி.

கரூர் தொகுதியில் இருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் கரூர் மாவட்டத்துக்குள் வருகின்றன. மணப்பாறை தொகுதி திருச்சி மாவட்டத்திலும், விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்திலும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும் வருகிறது.

தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தார்.

மணப்பாறை தொகுதியை கவனித்த அமைச்சர் அன்பில் மகேஷ், விராலிமலை தொகுதியை கவனித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மற்றும் வேடசந்தூர் தொகுதியை கவனித்த அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை நேரில் சந்தித்து ஜோதிமணி நன்றி தெரிவித்தார்.

இந்தநிலையில்,  செந்தில் பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க முடியாதது வருத்தமளிக்கிறது என்று ஜோதிமணி எம்.பி இன்று (ஜூன் 23) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“கரூர் நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணியின் சார்பில் களத்தில் முன்நின்று நடத்தி, இரண்டாவது முறையாக வெற்றியைத் தேடித்தந்த திமுகவின்  அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள்,பொறுப்பாளர் ,சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ,நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் இப்பணி முழுமை அடையாது. நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும், திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தைக் கைவிடாத செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவின் வெளிப்படையான அராஜகங்கள், வன்முறைக்கு இடையே அவர் முன்னின்று நடத்தினார். மக்களின் பேரன்போடும்,பேராதரவோடும் ஒரு மகத்தான் வெற்றியை நாங்கள் பெற்றோம்.

இம்முறை அவர் களத்தில் முன்னின்று தேர்தலை நடத்த முடியவில்லை. பாஜகவின் அராஜகம், அவரை இந்த தேர்தலில் களத்தில் முன் நின்று செயல்படவிடாமல் தடுத்தது.

அவர் நேரடியாக பங்கேற்க முடியவில்லையென்றாலும், கடந்த காலங்களில், அவர் இரவு பகலாக உழைத்து உருவாக்கி, பயிற்சியளித்து, வழிநடத்திய கரூர் மாவட்ட திமுக ,ஒரு படை போல நின்று, அர்ப்பணிப்போடு பணியாற்றி,இந்தியா கூட்டணியை வழிநடத்தி கரூர் மாவட்டத்தில் மீண்டுமொரு வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

இந்த வெற்றிக்குப் பின் செந்தில் பாலாஜி கடந்த காலத்தில் அமைச்சர் பணியோடு சேர்த்து, மாவட்ட செயலாளராக செலுத்திய அசுர உழைப்பும், இடைவிடாத தேர்தல் பணிகளும், அவர் களத்தில் இல்லாத இந்த நேரத்திலும் உறுதுணையாக இருந்தது.

கடந்த முறை வெற்றிச் சான்றிதழை பெறும் போது அவர் அருகில் இருந்தார். இம்முறை இல்லை என்கிற வருத்தமிருந்தாலும், தேர்தல் களத்தில் அவர் இல்லை என்று கொண்டாடியவர்களுக்கு, மக்களின் பேரன்போடும், பேராதரவோடு நாங்கள் இரண்டாவது முறையாக பெற்ற மகத்தான் வெற்றி, பதிலடி தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து நெரிசல்… நகரப்பகுதிகளில் புறவழிச்சாலைகள்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *