அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ஊழல் விசாரணைக்கு அனுமதி மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் அண்ணாமலை உள்ளாரா? என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவரது பதவி காலத்தில் ஜி.பி.எஸ் கருவிகளை வாங்குவதில் ஊழல் முறைகேடு நடைபெற்றது, பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது என ஏராளமான புகார்கள் உள்ளன.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் சோதனை நடத்தினர்.
மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் 15ஆம் தேதி கோப்புகளை அனுப்பி இருந்தது. ஆனால் ஆறு மாதங்களாகியும் அந்த கோப்பினை நிலுவையில் வைத்துள்ளார் ஆளுநர்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை இருக்கிறாரா?
அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கேசி வீரமணி, எம். ஆர் .விஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது.
இதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். இதில் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான கோப்புகளுக்கு மட்டும் ஒப்புதல் தந்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆனால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை ஆளுநர் கையெழுத்திடவில்லை. அந்த மர்மம் என்ன?
ஆளுநர் மாளிகை 6.7.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பாக கோப்பு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு வந்துவிட்டது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனை வைத்து பார்க்கும்போது ஆளுநர் அப்பட்டமாக பொய் சொல்கிறார். இப்படி இருக்கும் போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பதன் மர்மம் என்ன?
இதற்கு பின்னணியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்கிற கேள்வியை கேட்காமல் தவிர்க்க முடியவில்லை. இந்த கேள்வியை நான் எழுப்பியதை தொடர்ந்து பாஜகவினர் தகராறு செய்தால் பரவாயில்லை. அதிமுகவினர் ஏன் தகராறு செய்கின்றனர்? அதிமுகவிற்கு ஏன் வலிக்கிறது?” என ஜோதிமணி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
OPEN AI-க்கு திரும்பிய ஆல்ட்மேன்… ஐந்து நாளில் நடந்த அதிரடி திருப்பம்!
ஃப்ளூ காய்ச்சல்… மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்