எடப்பாடியுடன் இணைகிறேனா?: சசிகலா பதில்!

அரசியல்

எடப்பாடி பழனிசாமியுடன் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதிலளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 5) மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, “ஜெயலலிதாவின் நினைவு நாளில் தமிழக மக்களின் நலனுக்காகவும், நமது இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் உயர்வுக்காகவும் ஒன்றிணைவோம்” என்று உறுதிமொழி ஏற்றார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கென்று தனி வழி கிடையாது. எப்போதும் அம்மா வழி தான். தமிழ்நாட்டுக்கு அம்மா எப்படி நல்லது செய்தாரோ அதேபோன்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

திமுக வைப் பற்றி பேசிய அவர், “அந்த கட்சி கவுன்சிலர்கள், மற்ற பொறுப்பில் உள்ளவர்களை கண்டிக்க வேண்டியது முதல்வரின் பொறுப்பு. இதை தட்டிக்கழித்துவிட்டுப் போக முடியாது. மக்கள் ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் விரோதத்தைச் சம்பாதிக்கக் கூடாது.

தவறு செய்யும் கவுன்சிலர்களை அடக்கி வைக்க வேண்டும். உரியத் தண்டையைக் கொடுக்க வேண்டும். தினம் தினம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

காய்கறி கடை வியாபாரிகளிடம் காசு கேட்கிறார்கள். சின்ன பூ கடை கூட வைக்க முடியவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதெல்லாம் மக்கள் சொல்லும் கருத்து.

விளம்பரத்துக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என மக்களுக்கு தெரிகிறது. மணல் கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் முதல்வர் சரி செய்ய வேண்டும்” என்றார்.

join with Edappadi palaniswami Sasikala reply

மேலும் அவர், “நதிகள் பல இடங்களிலிருந்து வந்தாலும் நம்முடைய தாகத்தை தீர்க்கிறது. விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது. அதுபோன்று விரைவில் அனைவரும் ஒன்று சேருவோம்.

தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. யார் துரோகம் செய்தார்கள் என அவர்களுக்குத் தெரியும்.

2024 தேர்தலில் நாங்கள் நினைத்தபடி வெற்றி பெறுவோம். கூட்டணி பற்றிச் சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம். தமிழ்நாட்டு மக்களுக்காக எதையும் கேட்டுப் பெற வேண்டிய தைரியம் இருக்கிறது. தமிழ்நாட்டுக்காக நாம் விலை போகாமல் செய்ய முடியும் என்று நினைத்தால் அனைத்தையும் சாதிக்கலாம்” எனக் கூறினார்.

உங்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என வெளிப்படையாகவே பேசப்படுகிறது. அவருடன் இணைந்து செயல்படத் தொண்டர்கள் விருப்பப்பட்டால் உங்களுடைய விருப்பம் என்ன? என்ற கேள்விக்கு, ”தொண்டர்கள் நல்ல முடிவைத்தான் எடுப்பார்கள்” எனக் கூறினார்.

பிரியா

விஜய்யின் `தளபதி 67′ படம் பூஜையுடன் தொடங்கியது!

ரசிகர்களை ஈர்க்கும் ஃபிஃபா இட்லி!

+1
2
+1
5
+1
0
+1
2
+1
1
+1
2
+1
0