ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவைத் தொடர்ந்துதான் எங்களது முடிவை தெரிவிப்போம் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவில் யார் போட்டியிடுவது என்று ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே போட்டி நிலவி வருகிறது.
இதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ பன்னீர்செல்வமும் மாறி மாறி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை இரு தரப்பினரும் சந்தித்தனர்.
காலை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்ததை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன்,
“அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு முழு ஆதரவை அளிக்கிறது. இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
யாரை அவர்கள் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறச் செய்வோம்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாலை ஜான்பாண்டியனை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு கோரினார். இது தொடர்பாக ஜான்பாண்டியனும் பாஜக தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பாஜக நிர்வாகிகளை சந்தித்த பின் ஜான்பாண்டியன் அளித்த பேட்டியில், “இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டணி தர்மத்தை நிலை நாட்டவே தலைவர்கள் வந்து சந்திக்கிறார்கள்.
பாஜக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே பாஜக முடிவு செய்த பிறகு தான் நாம் முடிவை சொல்ல முடியும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி உள்ளது” என்று தெரிவித்தார்.
காலையில் இரட்டை இலை வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மாலையில் பாஜக எடுத்த முடிவுக்கு பிறகுதான் எங்களது முடிவை சொல்ல முடியும் என்று ஜான் பாண்டியன் கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
அபாரமான பந்துவீச்சு… அதிரடியான பேட்டிங்: ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா
அண்ணாமலையிடம் ஓபிஎஸ் சொன்னது என்ன?