ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணத்திற்கு புதின் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னி, ரஷ்ய அதிபர் புதினின் நிர்வாகத்தில் ஊழல் மலிந்திருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் மோசடி, தீவிரவாதத்தை தூண்டுதல், அறக்கட்டளை மூலம் முறைகேடாக பணம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அலெக்ஸி நவல்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து ரஷ்யாவின் கார்ப் பகுதியில் உள்ள ஆர்ட்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறையில் நேற்று அலெக்சி நவல்னி உயிரிழந்ததாக ரஷ்ய சிறைத்துறை தெரிவித்தது. இதுகுறித்து ரஷ்ய சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கார்ப் சிறையில் நேற்று வாக்கிங் சென்றபோது நவல்னி மயங்கி விழுந்தார். உடனடியாக சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அலெக்ஸி நவல்னி உயிரிழந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியபோது,
“ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கோபம் தான் வருகிறது, என்ன நடந்தது என்று எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை.
ஆனால், நவல்னி மரணத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிகாரிகள் தங்கள் சொந்த கதையை சொல்ல போகிறார்கள்.
புதின் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த நவல்னிக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த வருஷம் கப்பு எங்களுக்கு தான்: உறுதியாக சொல்லும் சென்னை ரைனோஸ்
ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்