ஜோடோ யாத்திரைக்கு சிக்கல்: ராஜஸ்தானில் முற்றும் கோஷ்டி மோதல்!

அரசியல்

ராஜஸ்தானில் முற்றும் கோஷ்டி மோதலால் ராகுலின் ஜோடோ யாத்திரைக்கு சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரத் ஜோடோ யாத்திரை என்கிற பெயரில் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கிய முன்னாள் காங்கிரஸ் தலைவரும் கேரள வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி, 80 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வருகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவின் இரு எல்லைகளையும் கால்களாலேயே அளந்து வரும் ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்னும் ஒரு சில நாட்களில் ராஜஸ்தானுக்குள் நுழைய உள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தாலும் அங்கு நிலவும் கோஷ்டி மோதலால் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் அமைதியாக அரங்கேறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 24-ம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் அவர் நடைப்பயணம் செய்த காட்சிகள் வெளியானது. அதே தினத்தில் சச்சின் பைலட்டுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையே அதிரும் அளவுக்கு கருத்துக்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்.

கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக அசோக் கெலாட்டும் துணை முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் அப்போதைய தலைவர் சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த சச்சின் பைலட்டுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால், 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் தனியார் ரிசார்ட்டில் தஞ்சமடைந்த சச்சின் பைலட், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

அப்போதே அவர் பாஜகவில் இணையப்போவதாக வதந்திகள் பரவின. இதனை அடுத்து சச்சின் பைலட்டை துணை முதலமைச்சர் மற்றும் கட்சி தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைமை நீக்கியது.

சச்சின் பைலட்டின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அவர் பாஜகவில் இணையாமல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே பயணித்து வருகிறார். 2020-ல் நடந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு எந்த முக்கிய பதவிகளும் வழங்கப்படவில்லை என்றாலும் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் என பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், ராஜஸ்தான் முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அசோக் கெலாட் போட்டியில் இருந்து பின் வாங்கியதால் இந்த முறையும் சச்சின் பைலட்டின் கனவு நிறைவேறவில்லை.

இந்த நிலையில் தான் கடந்த வியாழக் கிழமை அன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட் ஒரு துரோகி என்றும் அவரால் முதலமைச்சர் ஆக முடியாது என்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் 2020-ல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்ட எம் எல் ஏ-க்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுவரை சச்சின் பைலட் மன்னிப்பு கேட்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்றால் பைலட்டை தவிர மற்ற 102 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை காங்கிரஸ் முதலமைச்சராக தேர்வு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தான் அமைச்சர் ஹேமாராம் சவுத்ரி, ராஜேந்திர குதா ஆகியோர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

இதனால் ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் யாத்திரையில் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது போதாது என சச்சின் பைலட்டின் குஜார் சமூகத்தினர் ஜோடோ யாத்திரைக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர்.

குஜர் சமூக இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வரும் குஜர் ஆரக்சன் சமிதி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் கடந்த கால போராட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் ஜோடோ யாத்திரை அமைதியான முறையில் நடக்குமா என அச்சம் எழுந்துள்ளது.

அப்துல் ராஃபிக்

வானவில் மன்றம்: திருச்சியில் தொடங்கிவைத்த முதல்வர்

ஹர்திக்குடன் இணைந்து நடனமாடிய டோனி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *