செந்தில் பாலாஜி வழக்கின் நிலை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் உள்ளார்.
அவர் ஜாமினில் வெளி வந்ததை தொடர்ந்து உடனடியாக அமைச்சர் ஆக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று (ஜனவரி 27) விசாரணைக்கு வந்தபோது, “போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற வழக்கின் நிலை என்ன? விசாரணையின் நிலை குறித்து சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று சென்னை எம்.பி.எல்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது 2000 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளதால் தனி தனியாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேட்ட உச்ச நீதிமன்றம் மனுவை தனி தனியாக பிரித்து விசாரிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மற்றொரு வழக்கு
இதனிடையே இன்று (ஜனவரி 27) செந்தல் பாலாஜி தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பான பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை தங்களுக்கு வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவரை, இவவழக்கில் சாட்சியாக உள்ள தடய அறிவியல் துறையின் கணிணிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்று மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதியளித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கு விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.