ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க சம்பாய் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் கட்சி தற்போது போராடி வருகிறது.
ஒருநாள் நீதிமன்ற காவல்!
நில மோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அவரிடம் நேற்று சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதனையடுத்து இரவு 8.30 மணியளவில் ஆளுநர் மாளிகை சென்று தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.
அவர் இன்று ராஞ்சியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்ற்த்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சோரனை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வரும் ஆளுநர்?
இதற்கிடையே ஜார்க்கண்டின் அடுத்த முதல்வராக சம்பாய் சோரனை அறிவித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 41 பேர் பெரும்பான்மைக்கு போதும் என்ற நிலையில் ஜேஎம்எம் ஆளும் கூட்டணிக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது.
இதனையடுத்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தன்னை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க சம்பாய் சோரன் கோரினார். எனினும் அவருக்கு எந்த விளக்கமும் கூறாமல் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
விமானங்கள் ரத்து!
இதனால் கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் செய்ததுபோல் பாஜக, தங்களது எம்எல்ஏக்களை மிரட்டி விலைக்கு வாங்காமல் இருக்க ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி போராடி வருகிறது.
ராஞ்சியிலிருந்து தங்கள் எம்எல்ஏக்களை எப்படியாவது ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று விடலாம் ஜேஎம்எம் கட்சி மூத்த தலைவர்கள் திட்டமிட்டனர். ஆனால் வானிலை சரியாக இல்லை என கூறி ராஞ்சியில் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து விமானத்திற்காக காத்திருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி தற்போது பேருந்தில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக அரசின் போலி ஜனநாயக முகம் இது தான்!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அவர், “ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். அதற்காக 43 எம்எல்ஏக்கள் பேருந்தில் சென்றனர். ஆனால் அவர்கள் அழைக்கப்படவில்லை.
ஆனால் பீகாரில் காலையில் ராஜினாமா ஏற்கப்பட்டு அடுத்த 5 மணி நேரத்தில் புதிய அரசு அமைந்தது.
நாங்கள் கடந்த 22 மணி நேரமாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் போராடியும் ஆட்சி அமைப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை. இது மத்திய பாஜக அரசின் போலி ஜனநாயக முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/iamharmeetK/status/1753112744835068163
இதனையடுத்து சமூகவலைதளங்களில் பலரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/FinalWise4/status/1753108141921968551
நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
இதற்கிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் தரப்பில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நாளை காலை விசாரணைக்கு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா