ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துக்கான தேர்தல் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார்.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மூ காஷ்மீரில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஸ்ரீநகர் சென்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர்.
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “எனக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் உள்ள உறவு, ரத்த உறவாகும். எனது மிகப்பெரிய லட்சியமே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனதில் உள்ள கஷ்டங்களைப் போக்கி, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற்றுத் தருவதுதான்.” என்றார்.
இந்த கூட்டத்திற்குப் பின், மல்லிகார்ஜுனா கார்கேவும், ராகுல் காந்தியும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் அக்கட்சியின் துணை தலைவர் ஓமர் அப்துல்லாவை அவர்களது இல்லத்தில் சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பிற்குப் பின், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வருகிற தேர்தலைக் கூட்டாகச் சந்திக்கும் என்றார்.
மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ்-ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கூட்டணி போட்டியிடும் என்றார்.
கடந்த ஆகஸ்ட் 5, 2019 மத்திய அரசு அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதற்குப் பின் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மிதமான மழைதான்…மக்களே ரிலாக்ஸ்!
விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம்… பகுஜன் சமாஜ் எதிர்ப்பு!
மகள் என்று அழைத்தார், திடீரென கல்யாணம் பண்ணிட்டார்! – பிரபல இயக்குநர் குறித்து வடிவுக்கரசி