ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் 24 சட்டமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று (செப்டம்பர் 18) காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதில் 219 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்த முதல் கட்ட தேர்தலில் தோதா, கிஷ்த்வர், ரம்பன் அனந்தனாக், புல்வாமா குல்கம் மற்றும் ஷோப்பியன் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 23.27 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
41.17% வாக்குகள் பதிவு!
இன்று காலை 11 மணி வரை 26.72% வாக்குகள் பதிவாகிய நிலையில், மதியம் 1 மணி வரை 41.17 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் இந்தர்வால் தொகுதியில் அதிகபட்சமாக 60% வாக்குகளும், திரால் தொகுதியில் குறைந்தபட்சமாக 26.75% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே.போல் வாக்குப்பதிவு பற்றிக் கூறுகையில் “மக்கள் அதிகளவில் வாக்களிக்க வந்துள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்த முதல் கட்ட தேர்தல் முடிவில் மொத்தமாக 60 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும், இதுவரை எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தேர்தல் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.” என்றார்.
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைமை, ஸ்ரீநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் இம்தியாஸ் அஹ்மத் கான் மற்றும் இருவரை, சுயேட்சியாக போட்டியிட்டதால், கட்சியில் இருந்து நீக்கியது.
பாஜகவின் கிஷ்த்வர் தொகுதி வேட்பாளர் ஷகுன் பரிஹர், இன்று வாக்களித்தார். கிஷ்தவரின் தந்தை அஜித் பரிஹரும் அவரது தம்பி அனில் பரிஹரும் 2018 ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஷகுன் பரிஹர், இந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பெரியாருக்கும் விளையாட்டு துறைக்கும் என்ன சம்பந்தம்? – உதயநிதி சொன்ன பதில்!
துணை முதல்வர் பதவியா… யார் சொன்னது? – உதயநிதி கேள்வி!