ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அம்மாநில சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் (நவம்பர் 8) அமளி ஏற்பட்டது.
கடந்த மாதம் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு – காங்கிரஸ் – சிபிஎம் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவரான ஓமர் அப்துல்லா முதல்வராகவும், சுனில் குமார் சௌதரி துணை முதல்வராகவும், சகீனா மசூத், ஜாவேத் அஹ்மத் ரானா, ஜாவித் அஹ்மத் தர், மற்றும் சதீஷ் ஷர்மா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதற்குப் பின் அக்டோபர் 19ஆம் தேதி முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜம்மு காஷ்மீர் ஆளுநரான மனோஜ் சின்ஹாவும் ஒப்புதளித்தார்.
இந்த நிலையில், நவம்பர் 4ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கூடியது. அன்றே பிடிபி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான வஹீத்-உர்-ரெஹ்மான் பார்ரா, 2019 ஆண்டு அரசியலமைப்பு பிரிவு 370வை ரத்து செய்த ஆணையை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
ஆனால் இதை பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்த்தனர். இது தொடர்பாக ஓமர் அப்துல்லா கூறுகையில் ” பிடிபி கட்சி ஊடக வெளிச்சத்திற்காகத் தான் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்த தீர்மானத்தில் உண்மையான நோக்கம் இருந்தால், பிடிபி கட்சி ஆளுங்கட்சியான எங்களிடம் இதுகுறித்து கலந்துரையாடியிருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நிறைவேற்றுவதற்கான புதிய தீர்மானத்தைத் துணை முதல்வர் சுரிந்தர் குமார் சௌதரி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.இந்த தீர்மானம் 60 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தை எதிர்த்த பாஜக எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை அன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவரான பாஜக எம்.எல்.ஏ. சுனில் ஷர்மா ” இது சட்ட விரோதமான தீர்மானமாகும். இந்த தீர்மானத்தை திரும்பப்பெறும் வரை, சட்டமன்ற நடவடிக்கைகளை நடைபெற விடமாட்டோம்” என்றார்.
இந்த நிலையில் தான் மூன்றாவது நாளான இன்றும் (நவம்பர் 8) ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ களுக்கு இடையிலான கைகலப்பு தொடர்ந்தது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55′ ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அம்பேத்கர் சிலையை உடைக்க பாமக சதியா? – காவல்துறையை சாடும் ராமதாஸ்
300 கி.மீ. தரும் நானோ கார் எலக்ட்ரிக் வெர்சன்: ரத்தன் டாடாவின் கனவு நனவானது!