2023 டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பல்வேறு முக்கியமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் முழு உரை இதோ…
பிரதமருக்கு நன்றி
“2 வாரத்திற்கு முன் இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடினோம்.. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனமும் பெரும் பங்கை அளித்து வருகிறது.
தற்போது தான் உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. உலகளவில் பெரும் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டதுடன் எரிபொருள் விலை, உணவு, உரம் என அனைத்து விலையும் உயர்ந்துள்ளது.
ஆனால் இந்திய அரசு கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற அம்பானி தொடர்ந்தார்.
ரிலையன்சின் லாபப் பட்டியல்
“வருவாயில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டிய இந்தியாவின் முதல் கார்ப்பரேட் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திகழ்கிறது.
ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த வருவாய் 47% அதிகரித்து $104.6 பில்லியனாக உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர ஒருங்கிணைந்த EBITDA 1.25 லட்சம் கோடி ரூபாய் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் ரிலையன்ஸ் இந்தியா 8.4% பங்களித்தது.
கடந்த 2021-2022 நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
421 மில்லியன் வாடிகையாளர்களுடன் இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறார்கள்” என்று பட்டியல் வாசித்தார்.
டிஜிட்டல் இந்தியா
”பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் உந்துசக்தியால், ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தியா முழுக்க இணைய சேவையை கொண்டு செல்ல முடிந்தது
பிரதமர் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தால் 73,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது, இதன் மூலம் 63 பில்லியன் டாலருக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதுடன் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டது. ஜியோ பைபர் ஆப்டிக் உயர்தர இணைய சேவையை வழங்குகிறது.
ஜியோ பைபர் ஆப்டிக் நெட்வொர்க் 11 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கும் அதிகமானது. இது பூமியை 27 முறை சுற்றிவர போதுமானது.
புதிதாக இணைய சேவை வாங்கும் போது 3’ல் 2 பேர் ஜியோ பைபரை தான் தேர்வு செய்கின்றனர். தற்போது 7 மில்லியனுக்கும் மேற்பட்ட கனெக்ஷனுடன் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக ஜியோ பைபர் திகழ்கிறது.
இதனை இரண்டு ஆண்டுகளுக்குள் ஜியோ நிறுவனம் சாதித்துள்ளது. ஆனால் இந்தியா வெறும் 20 மில்லியன் கனெக்ஷனுடன் உலகளவில் 138 வது இடத்தில் உள்ளது. இதை விரைவில் மாற்ற வேண்டும்.. டாப் 10 நாடுகளுக்குள் இந்தியாவும் இருக்க வேண்டும். அதில் ஜியோ நிறுவனமும் பெரும் பங்கு வகிக்கும்” என்றார் அம்பானி.
5ஜி இந்தியா
மேலும் அவர், “இந்தியாவிற்கு 5ஜி சேவை அவசியமானது அதன் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி பிராட்பேண்ட் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்க்காக இருக்கும்.
4ஜி நெட்வொர்க்கை சார்ந்து இந்த இணைப்பு இருக்காது. ஜியோவின் 5ஜி சேவையானது ஸ்டேண்ட் அலோன் வகையில் 5ஜி சேவையாக மட்டுமே இருக்கும்.
ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்காக சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
ஜியோவின் 5ஜி சேவையானது முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் அறிமுகம் செய்யப்படும். இதனை தொடர்ந்து வரும் 2023 டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் நகரங்கள், தாலுக்கா என அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக 2000-க்கும் மேற்பட்ட ஜியோ பொறியாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் பணி மேற்கொண்டுள்ளனர்” என்று பேசினார் முகேஷ் அம்பானி.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் சிற்றூர்களும் 5ஜி வசதி பெற்றிருக்கும் என்பதே அம்பானி பேச்சின் அடி நாதம்!
க.சீனிவாசன்
அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவை: ஒன்றிய அமைச்சர்!