ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட தேர்தல் மற்றும் வயநாடு இடைத்தேர்தல் இன்று (நவம்பர் 13) நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்றும், வரும் 20ஆம் தேதியும் என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
இதில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இரண்டு கட்சிகளுமே வலுவாக கூட்டணிகள் அமைத்துள்ளன.
காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
பா.ஜ.க கூட்டணியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அங்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், தற்போது 9 மணி நிலவரப்படி 13.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகள் மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் ராணுவப் பாதுக்காப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வயநாடு இடைத்தேர்தல்!
கேரளா மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலை பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி 13.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 2வது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், ரே பரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததால் வயநாட்டில் அவர் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் பிரியங்கா காந்தி. இங்கு அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோருடன் 13 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தல் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமாக இருக்கும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரியங்கா வேண்டுகோள்!
வயநாட்டில் தேர்தல் வாக்குச்சாவடிகளை இன்று காலை பார்வையிட்ட பிரியங்கா காந்தி, “மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பது நல்லது. அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். இதுவே அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலம். அரசியலமைப்பின் மூலம் மக்கள் அதை அவர்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொள்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி!