ரிசார்ட்டுக்கு அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள்: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு!

அரசியல்

ஜாா்க்கண்ட் அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்எல்ஏக்கள் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளனா்.

81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.

அக்கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு 18 எம்எல்ஏக்களும்,

ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஓா் எம்எல்ஏவும் உள்ளனா். பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்ய கோரி தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டது.

இதை ஏற்று ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் ஆகஸ்ட் 25ம் தேதி பரிந்துரைத்தது. இதன்மீது ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தைப்போல் ஜார்க்கண்டிலும் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் என பாஜகவினர் மீது குற்றச்சாட்டை வைத்தார் முதல்வர் ஹேமந்த் சோரன்.

இதைத் தொடர்ந்து ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் 32 போ், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இவர்களுடன், முதல்வா் ஹேமந்த் சோரனும் சென்றாா். நேற்று (ஆகஸ்ட் 30) மாலை ராய்ப்பூா் விமான நிலையத்தை சென்றடைந்த அவர்கள்,

அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நவ ராய்ப்பூா் கேளிக்கை விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஆனால், முதல்வர் ஹேமந்த் சோரன், தம் கட்சி எம்.எல்.ஏக்களுடன் கேளிக்கை விடுதிக்குச் செல்லவில்லை.

எம்.எல்.ஏ.க்களை விமான நிலையத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு அனுப்பி வைத்து விட்டு மீண்டும் தனது இல்லத்துக்கு திரும்பினார்.

அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இது அரசியலில் நடப்பதுதான். நாங்கள், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.

jharkhand ruling alliance mlas

பின்னர் இரவு 9.30 மணியளவில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கிரிஷ் தேவாங்கன், சன்னி அகர்வால் மற்றும் ராம்கோபால் அகர்வால் ஆகியோர் ரிசார்ட்டுக்கு சென்று ஜார்க்கண்ட் எம்எல்ஏக்களை பார்த்தனர்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், அங்கு சென்றால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும்,

ஜார்க்கண்டில் நிலவி வரும் தற்போதைய சூழலை சமாளிக்க எம்.எல்.ஏ.க்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

ஜார்க்கண்டில் ஒரு கூவத்தூர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *