எமர்ஜென்சி போராளி முதல் ஆளுநர் வரை:  யார் இந்த சிபிஆர்?

அரசியல்

தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் மூன்றாவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

1957 ஆம் ஆண்டு திருப்பூரில் பொன்னுசாமி என்பவருக்கு மகனாக பிறந்தவர் ராதாகிருஷ்ணன்.  திருப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்தவர்,  தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் பிபிஏ படித்தார்.  பள்ளி மாணவராக இருக்கும்போதே ஆர்.எஸ்.எஸ், இயக்கத்தின் அறிமுகம் கிடைக்கப்பெற்று தனது 16 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்  இணைந்தார்.  1975-77 இல் இந்திரா காந்தி கொண்டுவந்த  அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக மாணவர்களை திரட்டி போராட்டம் செய்தார்.

கோவை மாவட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எமர்ஜென்சி எதிர்ப்பு மாணவர்  இயக்கத்தில் அமைப்புச் செயலாளராக பணியாற்றி மாணவர்களை ஒன்று திரட்டி போராடினார்.  ஜனதா கட்சியில் அரசியல் ரீதியாக பணியாற்றினார். ஜனதா கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு பின் நாட்களில் மாறினார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்காக ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையாக உழைத்தவர். திருப்பூர் பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் தன்னுடைய இளமை காலங்களில் போராடி இருக்கிறார். 1985 ஆம் ஆண்டு சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார்.

அப்போது பாஜக ஆட்சியில் வணிகம் மற்றும் ஜவுளி துறைக்கான கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா பாரதிய ஜனதா கட்சிக்கான ஆதரவை திரும்ப பெற்றதன் காரணமாக 1999 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக பாஜக கூட்டணி சார்பாக கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

1999 இல் இருந்து தமிழகத்தில் திமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன். திமுகவுடன் நெருக்கமானவராக கருதப்படும் சி.பி. ராதாகிருஷ்ணன் மாநில தலைவராக இருந்த காலத்தில் தான் திமுக உடனான பாஜகவின் கூட்டணி தமிழ்நாட்டில் முறிந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தோல்வி கண்டது.

அதன் பிறகு சி. பி. ராதாகிருஷ்ணனின் அரசியல் வாழ்வில் பெரிய அளவு வெற்றிகள் கிடைக்கவில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்தார். 2009 தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்கப்படவில்லை. மீண்டும் 2014, 2019 தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் நின்று தோல்வியை தழுவினார் சி.பி. ராதாகிருஷ்ணன். இடையே  2016 ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் மத்திய கயிறு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர், கேரள மாநில பொறுப்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்த சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். இதற்கான  ஆலோசனைகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா இல்ல திருமண விழாவுக்காக டெல்லி சென்ற சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த முறை மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை பற்றியும் டெல்லியில் சில முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். சென்னை திரும்பிய சி.பி‌.ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைத்தேர்தலுக்காக அதிமுக நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜகவின் பிரதிநிதியாக பங்கேற்றார்.

இந்த நிலையில் தான் இன்று அதிகாலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுநராக நீங்கள் நியமிக்கப்பட உள்ளீர்கள் என்ற தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

 ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து திருப்பூரில் அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த ராதாகிருஷ்ணன் தனது தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.  

பிறகு திருப்பூரில்  செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ” தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்திருப்பது தமிழ் இனத்தின் மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர்கள் அன்பும் பாசமும் மரியாதையும் பெருமையும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாகும்.

மாநிலத்துக்கும்  மத்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார் சி பி ராதாகிருஷ்ணன்.

16 வயதில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிய மாணவராக இருந்து எமர்ஜென்சியை எதிர்த்து போராடிய சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி, அரசியல் கடந்து அனைவரிடமும் பழகுவதற்கு இனியவர் என்று பெயரெடுத்தவர் சிபிஆர். தனது அரசியல் வாழ்வின் அடுத்த இன்னிங்ஸான ஆளுநர் பதவிக் காலத்திலும் அவ்வாறே பெயரெடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.

ஆரா

”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்

“வெளிமாநில கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம்மில் கைவரிசை”: ஐஜி கண்ணன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *