பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயரப் பாடுபடுவேன் என்று ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று விலகினார்.
இந்த விலகல் கடிதத்தைக் கமலாலயத்துக்குச் சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.
இதன் பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, கனத்த இதயத்துடன் சி.பி.ராதாகிருஷ்ணனின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “17 வயதில் ஜன சங்கத்தின் உறுப்பினராக 1974ல் எனது பொது வாழ்க்கை தொடங்கியது. இன்று இந்த இயக்கத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது.
இந்த இயக்கத்திலிருந்து அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இதை ஒரு தவிர்க்க இயலாத தருணமாகப் பார்க்கிறேன்.
இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் இன்று மகத்தான இளைய தலைமுறையாக பாஜக இருக்கிறது. எத்தனையோ சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம். இல.கணேசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிரமமான காலத்தில் பணியாற்றியிருக்கிறோம்.
யார் தடுத்தாலும், அவதூறு பரப்பினாலும், குற்றங்களைச் சுமத்தினாலும் எல்லாத்தையும் எளிதாகக் கடந்து தமிழகத்திலும் பாஜக ஆட்சியை அண்ணாமலை நடத்திக் காட்டுவார்.
ஜார்க்கண்ட் ஒரு அற்புதமான மாநிலம். பழங்குடியின மக்கள் அதிகம் இருக்கும் மாநிலம். அந்த மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குப் பாடுபடுவேன்” என்று கூறினார்.
பிரியா
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் தேடுதல்!
‘பகாசூரனை’ மிரட்டி வாங்கியதா ரெட் ஜெயண்ட்?