மோடியை சந்தித்த ஹேமந்த் சோரன் : ஏன்?
ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைத்துள்ள ஹேமந்த் சோரன் பிரதமர் மோடியை இன்று (நவம்பர் 26) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ்-ஆர்ஜேடி-இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
வரும் 28ஆம் தேதி புதிய ஆட்சி பொறுப்பேற்க அம்மாநில முதல்வரிடம் உரிமை கோரினார் முதல்வர் ஹேமந்த் சோரன்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் பிரதமர் மோடியைச் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹேமந்த் சோரன், “பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்துக்குச் சென்று அவரையும் தனது மனைவியுடன் சந்தித்தார் ஹேமந்த் சோரன்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “இனி வரும் நாட்களிலும் இந்த சந்திப்புகள் நடக்கும். புதிய ஆட்சி அமைக்கவுள்ளோம். அதற்காக வாழ்த்து பெற வந்தோம்” என்று கூறினார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நட்டா, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி கொண்ட ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நக்சல்களை வளர்க்கும் வேலையை தான் செய்கிறது. அதற்கு முடிவு கட்ட பாஜக வந்துள்ளது. ஊழல் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று கூறினர்.
இந்தநிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு மோடியையும் அமித்ஷாவையும் ஹேமந்த் சோரன் சந்தித்திருப்பது இந்திய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“மலையாள திரையுலகம் பெண்களுக்கு ஏற்றதல்ல” : நடிகை சுகாஷினி
உதயநிதியின் பிறந்தநாள் பாடல்… அன்பில் சொன்ன மெசேஜ்!