தேடிய ED : 30 மணி நேரம் கழித்து திரும்பிய முதல்வர்!
கடந்த 30 மணி நேரத்திற்கும் மேலாக காணவில்லை என்று அமலாக்கத்துறை கூறி வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஜனவரி 30) ராஞ்சி திரும்பினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா தனது மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அவரைத்தொடர்ந்து ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார்.
இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியிலிருந்து மொத்தமாக வெளியேறிவிட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி நெருக்கடி அளித்து வருகிறது.
இந்த நிலையில், ஜார்கண்ட் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்தி மோர்ச்சா தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரனை நிலமோசடி விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை துரத்தி வருகிறது.
இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை ஹேமந்த் சோரன் புறக்கணித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று (ஜனவரி 29) ஹேமந்த் சோரனை விசாரிக்க ஜார்கண்ட் பவன் மற்றும் மோதிலால் நேரு மார்க்கிலுள்ள அவரின் தந்தையின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு அவர் இல்லை என்பதால் டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் ஹேமந்த் சோரன் இல்லை.
எனினும் சோதனையின் முடிவில் சில ஆவணங்களையும், ஹேமந்த் சோரனின் BMW காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை ‘காணவில்லை’ என்றும், ’விசாரணை நிறுவனத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் தெரிவித்தது.
இதற்கிடையே அமலாக்கத்துறையின் 10வது சம்மனை ஏற்று நாளை ஜனவரி 31 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தனது ராஞ்சி இல்லத்தில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக அவர் ஒப்புக்கொண்டதாக ED வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து ஹேமந்த் சோரன் இன்று ராஞ்சியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.
மேலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் கூட்டணியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ராஞ்சியில் உள்ள முதல்வர் இல்லத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதில் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகியவை ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
ஜனவரி 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானால் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்றும் ஊகங்கள் உள்ளன.
முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சி திரும்பியதை அடுத்து, ஜேஎம்எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர், ”இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நில மோசடி வழக்கில் நாளை விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் (ED) முன்மொழிந்துள்ள உத்தி குறித்து விவாதிக்கவும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சில தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி சென்றார். தற்போது அவர் திரும்பி வந்துவிட்டார். ஆனால், சோரனுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை தேவையற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த வழக்குக்கும் சோரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று குற்றம் சாட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்ல தடை!
வான்வெளி, பாதுகாப்பு, மருத்துவ துறை : ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!