கமலாலயத்தில் நேற்று (ஜனவரி 21) அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகைக்காக தான் காத்திருந்தோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேற்று சென்றிருந்தனர்.
அப்போது அவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகைக்காக காத்திருந்ததாக சமூக வலைதளங்களில் #SaveAdmk என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.
இந்தநிலையில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்டோர் சென்னையில் இன்று (ஜனவரி 22) சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க கேட்டுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “நேற்று கமலாலயத்தில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்டவர்களின் வருகைக்காக தான் காத்திருந்தோம்.
ஆனால் நாங்கள் கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்காக காத்திருந்ததாக தவறாக செய்தி பரப்பப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம், பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் என்று எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவேன் என்று கூறுவது சட்ட ரீதியாக தவறு. திமுக-வின் பி-டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.
அவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் மக்கள் அவரை சுயேட்சை வேட்பாளராக தான் கருதுவார்கள். இந்த தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர் செல்வம் நோட்டாவிற்கு கீழே சென்று விடுவார். அண்ணாமலையுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.” என்று தெரிவித்தார்.
செல்வம்
உலகளவில் கவனம் பெற்ற ராம்சரண் ஆடை!
ஈரோடு கிழக்கு: களமிறங்கும் ‘நாம் தமிழர்’!